Home Featured தமிழ் நாடு தமிழகப் பார்வை: காங்கிரசுக்கும் – வாசனுக்கும் ஒருசேர நட்புக் கரம் நீட்டும் திமுக!

தமிழகப் பார்வை: காங்கிரசுக்கும் – வாசனுக்கும் ஒருசேர நட்புக் கரம் நீட்டும் திமுக!

792
0
SHARE
Ad

karunanithi-thirunavukkarasu-meeting

சென்னை – விரைவில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெறவிருப்பதை முன்னிட்டு தமிழகம் அடுத்தகட்ட அரசியல் சதுராட்டங்களுக்குத் (அல்லது சதிராட்டங்களுக்கு) தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டு வருகின்றது.

நேற்று ஒரே நாளில் ஒரு பக்கம், காங்கிரசுக்கும், இன்னொரு பக்கம் காங்கிரசிலிருந்து விலகி எதிர்க்கடை விரித்திருக்கும் ஜி.கே.வாசனுக்கும் நட்புக் கரம் நீட்டி, தனது அடுத்த கட்ட அரசியல் அடியை எடுத்து வைத்திருக்கின்றது திமுக தலைமை.

#TamilSchoolmychoice

காங்கிரசின் தமிழகத் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் திருநாவுக்கரசர் நேற்று திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதி இல்லம் சென்று அவரை மரியாதை நிமித்தம் சந்தித்தார். அந்த சந்திப்பின்போது திமுக பொருளாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலினும் உடனிருந்தார்.

karunanithi-thirunavukkarasu

அந்த சந்திப்புக்குப் பின்னர் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த திருநாவுக்கரசர் உள்ளாட்சித் தேர்தல்களிலும் காங்கிரஸ்-திமுக கூட்டணி தொடரும் என்ற அறிவிப்பை விடுத்தார்.

ஆனால், அதற்கு முன்னதாக தமிழ் மாநிலக் காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், சென்னை ஆழ்வார்ப் பேட்டையிலுள்ள மு.க.ஸ்டாலின் இல்லம் சென்று, அவரைச் சந்தித்து விட்டு பத்திரிக்கையாளர்களைச் சந்தித்துப் பேசும்போது, திமுகவுடன் தமிழ் மாநிலக் காங்கிரஸ் கூட்டணி அமைத்துப் போட்டியிடும் விரைவில் மற்ற விவரங்கள் வெளியிடப்படும் என அறிவித்தார்.

g.k.vasanவாசனின் (படம்) சந்திப்பு-கூட்டணி பற்றி திருநாவுக்கரசரும் அடக்கி வாசித்தார்.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், திமுகவுடன் கூட்டணி அமைத்து, 41 இடங்களில் போட்டியிட்ட காங்கிஸ் வெறும் 8 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.

ஜெயலலிதாவைத் தோற்கடித்துத் தாங்கள் ஆட்சி அமைக்க முடியாமல் போனதற்கு காங்கிரசின் பலவீனமே காரணம் எனக் கருதும் திமுக, ஓரளவுக்கு செல்வாக்கு மிக்க வாசனின் கட்சியைத் தங்களுடன் இணைத்துக் கொள்வதன் மூலம் அந்தப் பலவீனத்தை சரிசெய்து கொள்ள முடியும் எனக் கருதுகின்றது.

காங்கிரசின் தலைமையோடு கருத்து வேறுபாடு கொண்டு, தனது தந்தையார் கருப்பையா மூப்பனாரின் தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சியை மீண்டும் புதுப்பித்து தனிக்கட்சி கண்ட வாசன், திமுகவுடன் இணைவதன் மூலம் ஓரளவுக்கு தனது கட்சியை அடிமட்டத்தில் நகர்த்திச் செல்ல முடியும் எனக் கருதுகின்றார்.

அதேசமயத்தில், காங்கிரசை அடக்கி வைக்கவும், திமுக கணக்குப் போடுகின்றது. அப்படியே வாசனை இணைத்துக் கொள்வதால், காங்கிரஸ் கோபித்துக் கொண்டு கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டாலும் பரவாயில்லை, அதனால் பெருத்த பாதிப்பு எதுவும் நேரப் போவதில்லை என்பது திமுகவின் வியூகம்.

திருநாவுக்கரசரின் அரசியல் சிக்கல்

திருநாவுக்கரசர் தலைமையேற்ற பின்னர் சந்திக்கும் முதல் அரசியல் சிக்கல் உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைக்கும் பிரச்சனையாகும்.

இனி வாசன் கட்சிக்கும், காங்கிசுக்கும் எத்தனை இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன, சோனியா-ராகுல் தலைமை என்ன கருதுகின்றது என்பது போன்ற அம்சங்களை வைத்து, காங்கிரஸ், திமுக கூட்டணியில் தொடருமா இல்லையா என்பது வரும் நாட்களில் முடிவாகும்.

thirunavukkarasarவாசன் கட்சியினருடன் ஒரே அணியில் இணைந்து போட்டியிடுவதா என்ற தன்மானப் பிரச்சனைக்கும் திருநாவுக்கரசர் தலைமை விடை காண வேண்டும்.

வாசனைப் பொறுத்தவரை, மக்கள் நலக் கூட்டணியில் இருந்து முதல் ஆளாக வெளியேறியவர். அவருக்கு திமுகவுடன் கூட்டணி அமைப்பது என்பது ஒருவகையில் வெற்றி என்றுதான் கூற வேண்டும்.

இதற்கிடையில், அதிமுக தனித்துப் போட்டியிடும் சூழலே இதுவரை உருவாகி இருக்கின்றது.

வைகோவின் மதிமுக, திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் அடங்கிய மக்கள் நலக் கூட்டணி தொடர்ந்து ஓரணியாக உள்ளாட்சித் தேர்தல்களைச் சந்திக்கும் என எதிர்பார்க்கப்படும் வேளையில், விஜயகாந்தின் தேமுதிக தனித்துப் போட்டியிடுமா, அல்லது மீண்டும் மக்கள் நலக் கூட்டணியுடன் இணையுமா என்பது போன்ற அரசியல் கேள்விகளுக்கும் அடுத்த சில நாட்களில் விடை கிடைக்கலாம்.

அடுத்தடுத்த அரசியல் காய் நகர்த்தல்களைப் பார்க்கும்போது, சட்டமன்றத் தேர்தல்களுக்கு இணையான பரபரப்பையும், எதிர்பார்ப்பையும், எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தல்களும் ஏற்படுத்தும் என்பது மட்டும் நிச்சயம்!

-இரா.முத்தரசன்