கோலாலம்பூர் – கடந்த 2015-ம் ஆண்டு இந்தோனிசியக் காடுகள் பற்றி எரிந்து அதன் மூலம் பரவிய புகைமூட்டத்தினால், இந்தோனிசியா, சிங்கப்பூர் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில், 1 லட்சத்திற்கும் (100,000) அதிகமான அகால மரணங்கள் நிகழ்ந்திருப்பதாக ஆய்வறிக்கை ஒன்று கூறுகின்றது.
இந்தோனிசிய அரசின் கணக்கை விட மிகக் கூடுதலாக மரணங்கள் நிகழ்ந்திருப்பதாகவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹார்வர்டு மற்றும் கொலம்பியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள், காற்று மாசு அளவீடுகள் மூலம், புகைமூட்டத்தினால் ஏற்பட்டுள்ள மரணங்களைக் கணக்கிட்டு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
கடந்த செப்டம்பர் 19-ம் தேதி, ‘சுற்றுச்சூழல் ஆராய்ச்சி கடிதங்களின் பத்திரிகை’ என்ற செய்தியில் வெளியிடப்பட்ட அவ்வறிக்கையில், “கடந்த 2015-ம் ஆண்டு, புகைமூட்டம் காரணமாக இந்தோனிசியா, மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் 100,300 -க்கும் அதிகமானோர் மரணமடைந்துள்ளனர் என நாங்கள் கணக்கிட்டுள்ளோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.