Home Featured இந்தியா கூடுதல் காவேரி நீர் திறந்து விட முடியாது – சித்தராமையா மீண்டும் பிடிவாதம்!

கூடுதல் காவேரி நீர் திறந்து விட முடியாது – சித்தராமையா மீண்டும் பிடிவாதம்!

823
0
SHARE
Ad

siddaramaiah-deva-gowda-karnataka

பெங்களூரு – நேற்று புதன்கிழமை இரவு வரை நீடித்த மாநில அமைச்சரவைக் கூட்டத்தின் முடிவுப்படி தமிழ்நாட்டுக்கு கூடுதல் காவேரி நதி நீரைத் திறந்து விடும் முடிவு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்.

நேற்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்திய பின்னர் அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி, ஒரு வாரத்திற்கு தினசரி 6,000 கன அடி நீரைத் திறந்துவிட வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அமலாக்கப்பட  முடியாதது என்றும் கர்நாடக அரசாங்கம் அறிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

இதனைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத் தீர்ப்பையே செயல்படுத்த மறுக்கும் மாநில அரசாங்கத்தின் சட்டபூர்வ நிலைமை இனி என்னவாக இருக்கும் என்ற சட்டக் கேள்விகளும் எழுந்துள்ளன.

siddaramaiah-all-party-meetநேற்று புதன்கிழமை பெங்களூருவில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டம்…

இதற்கிடையில் நாளை வெள்ளிக்கிழமை செப்டம்பர் 23-ஆம் தேதி கர்நாடக சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டம் நடைபெறும் என்றும் சட்டமன்றத்தின் முடிவுகள் தெரியும் வரை காவேரி நீரைத் திறந்து விடும் முடிவு ஒத்திவைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற முடிவு அமலாக்கப்பட முடியாதது என முன்னாள் மத்திய சட்டத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி கூறியிருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே “நாங்கள் செத்துக் கொண்டிருக்கும்போது நீதிமன்ற அவமதிப்பு என்பது என்னவாக இருக்க முடியும்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னாள் பிரதமர் தேவகவுடாவும் கூடுதல் தண்ணீர் திறந்து விட முடியாது என்று கூறியுள்ளார். குடிநீர் என்பது பயிர்களுக்கான தண்ணீர் என்பதை விட முக்கியம் என்றும், தண்ணீர் இன்றி பயிர்கள் நாசமடைந்தால், விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு கொடுக்க முடியும் என்றும் தேவகவுடா ‘புதிய’ விளக்கம் கொடுத்துள்ளார்.

தேவகவுடாவுடன் தனிப்பட்ட சந்திப்பு ஒன்றை நடத்தி அவரின் ஆலோசனையையும் பெற்றதாகவும் சித்தராமையா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் (மேலே படம்).