சுவிடன், மார்ச்.19- ஆயுதங்களை இறக்குமதி செய்து கொள்முதல் செய்வதில் இந்தியா முதலிடம் வகிப்பதாகவும்,அதே நேரத்தில் ஆயுதங்கள் ஏற்றுமதியில் சீனா வேகமாக முன்னேறி வருவதாகவும் ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.
சுவீடனின் ஸ்டாக்ஹோம் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சர்வதேச அமைதி மற்றும் ஆராய்ச்சி அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வில்,ஆயுதங்கள் இறக்குமதியில் ஆசிய நாடுகள் தான் முன்னிலையில் உள்ளன.
இவற்றில் இந்தியா கடந்த 2003-2007 மற்றும் 2008-12 ஆகிய ஆண்டுகளில் 59 சதவீத ஆயுதங்களை இறக்குமதி செய்து உள்ளது எனவும், உலகளவில் ஆயுதங்கள் இறக்குமதியில் முதல் ஐந்து நாடுகளாக இந்தியா (12%), சீனா (6%), பாகிஸ்தான் (5%), தென்கொரியா (5%), சிங்கப்பூர் (4%)ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன எனவும் தெரிவித்திருக்கிறது.
அதே வேளையில் ஆயுதங்கள் ஏற்றுமதியில் உலகளவில் சீனா ஐந்தாவது இடத்தில் உள்ளது. முதல் ஐந்து நாடுகள் பட்டியலில் அமெரிக்கா (30%), ரஷ்யா (26%),ஜெர்மனி (7%),பிரான்ஸ் (6%),சீனா (5%) ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன.
ஆயுதங்கள் ஏற்றுமதியில் 5 வது இடம் பெற்றிருந்த பிரிட்டனை பின்னுக்கு தள்ளிவிட்டு சீனா முந்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.