சென்னை – தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக் குறைவால் அப்போல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஒரு நாள் முழுமையாக நிறைவடைந்து விட்ட நிலையில், இதுவரை திமுக தரப்பில் இருந்து யாரும் அறிக்கை எதுவும் விடாத கண்ணியக் குறைவான அரசியல் அரங்கேறியுள்ளது.
சோனியா காந்தி உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்ட போது, அவருக்கு எதிராக அரசியல் நடத்தும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அனுதாபம் தெரிவித்து, நலமடைய வாழ்த்து தெரிவித்தார்.
இது போன்ற கண்ணியம் மிக்க அரசியல் பண்பு ஏனோ தமிழ் நாட்டில் மட்டும் காணப்படுவதில்லை.
நேற்று ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவருடன் பல விவகாரங்களில் மாற்றுக் கருத்து கொண்ட காங்கிரசின் குஷ்பு, நடிகர்-இயக்குநர் டி.இராஜேந்தர் போன்றவர்கள் கூட அவர் உடல் நலம் பெறவேண்டி அறிக்கை விட்டுள்ளனர்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் ஜெயலலிதா நலம்பெற வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆனால், எது எதற்கோ அறிக்கை விடும் திமுக தலைவர் கருணாநிதி, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோரிடமிருந்து இதுவரை எந்தவித அறிக்கையும் வெளிவரவில்லை.
எதிர்தரப்பு அரசியல் தலைவர் என்றாலும், தமிழகத்தின் முதல்வர் என்ற முறையிலாவது உடல்நலம் பெற்று குணமடைய வாழ்த்து சொல்லும் கண்ணியம் திமுக தரப்பில் இல்லாதது, தமிழக அரசியலின் சாபக்கேடுதான்!
அந்த வகையில் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவனைப் பாராட்ட வேண்டும். தமிழக முதல்வர் உடல்நலம் பெற வேண்டி தனது வாழ்த்துகளை அவர் தெரிவித்துக் கொண்டுள்ளார்.