Home Featured உலகம் 100 மில்லியன் தொலைக்காட்சி இரசிகர்கள் பார்க்கப் போகும் ஹிலாரி-டிரம்ப் விவாதம்!

100 மில்லியன் தொலைக்காட்சி இரசிகர்கள் பார்க்கப் போகும் ஹிலாரி-டிரம்ப் விவாதம்!

974
0
SHARE
Ad

Donald-Trump-Hillary-Clinton-

நியூயார்க் – நாளை செவ்வாய்க்கிழமை மலேசிய நேரப்படி காலை 9.00 மணியளவில் சிஎன்என் தொலைக்காட்சி அலைவரிசையில் நேரலையாக ஒளிபரப்பாகவிருக்கும் அமெரிக்க அதிபர் வேட்பாளர்கள் ஹிலாரி கிளிண்டன், டொனால்ட் டிரம்ப் இருவருக்கும் இடையிலான நேரடி விவாதம் ஏறத்தாழ 100 மில்லியன் தொலைக்காட்சி இரசிகர்களை உலகம் முழுவதும் ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதன்மூலம், அமெரிக்க வரலாற்றில் மிக அதிகமானோர் பார்த்த அமெரிக்க அதிபர் வேட்பாளர் விவாதமாக இது அமையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

#TamilSchoolmychoice

சில விவகாரங்களில் இரு வேட்பாளர்களுமே பின்னடைவை எதிர்நோக்கி இருப்பதால், நாளை நியூயார்க்கில் நடைபெறவிருக்கும் 90 நிமிட விவாதம் இருவருக்குமே முக்கியமான களம் என்பதோடு, அவர்களுக்கிடையில் கடுமையான மோதல்கள் இருக்கும் எனவும் ஊடகங்கள் கணித்துள்ளன.

நவம்பர் 8-ஆம் தேதி நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் நடுநிலை வாக்காளர்களையும், இதுவரை யாருக்கு வாக்களிப்பது என்பது குறித்து முடிவெடுக்காமல் இருக்கும் வாக்காளர்களையும் தங்களின் பக்கம் திசை திருப்புவதற்கான ஓர் அருமையான வாய்ப்பாக நாளைய விவாதம் அமையும்.

இதுவரை இருதரப்புகளுக்குமே சமமான ஆதரவு இருப்பதாக ஊடகங்கள் கணித்து வருவதால், இரு வேட்பாளர்களும் இந்த விவாத மேடைக்கு எல்லா வகையிலும் தங்களைத் தயார்ப்படுத்தி வருகின்றனர்.

இந்த ஆண்டுக்கான அதிபர் தேர்தலில் முதல் விவாதமாகவும் இருப்பதால் அதிகமானோர் இந்த விவாதத்தைப் பார்க்கக் கூடும் என்றும் கணிக்கப்படுகின்றது.

இதுவரை நடந்த அதிபர் வேட்பாளர்களுக்கான விவாதங்களிலேயே 1980-ஆம் ஆண்டில் ஜிம்மி கார்ட்டர்-ரொனால்ட் ரீகன் இடையில் நடந்த விவாதம்தான் அதிகமான தொலைக்காட்சி இரசிகர்களை ஈர்த்தது. சுமார் 80 மில்லியன் இரசிகர்கள் இந்த விவாதத்தைக் கண்டு களித்தனர்.

அப்போது அதிபராக இருந்த ஜிம்மி கார்ட்டரை வீழ்த்த ஒரு சினிமா நடிகர் பிரபலமாக அதிபர் போட்டியில் குதித்தவர் ரொனால்ட் ரீகன். அந்தத் தேர்தலில் ரொனால்ட் ரீகன் ஜிம்மி கார்ட்டரை வீழ்த்தி, குடியரசுக் கட்சி அதிபராக வெற்றி பெற்றார்.

அதன் பின்னர், 2012-இல் அதிபர் தேர்தலில் போட்டியிட்ட பராக் ஒபாமா, மிட் ரோம்னி இடையிலான நேரடி விவாதம் 67 மில்லியன் இரசிகர்களால் கண்டு களிக்கப்பட்டது.

நாளை செவ்வாய்க்கிழமை ஹிலாரி-டிரம்ப் இடையிலான விவாதம் 100 மில்லியன் இரசிகர்களை ஈர்க்கும் என்றும், இதுவே மிக அதிகமான இரசிகர்களை ஈர்த்த விவாதமாக, அமெரிக்க அதிபர் தேர்ததல் வரலாற்றில் இடம் பெறும் என்றும் ஊடகங்கள் கணித்துள்ளன.