கோலாலம்பூர் – கடந்த ஆண்டு வெளியாகி மக்களிடையே மிகுந்த வரவேற்பினைப் பெற்ற மலேசியத் திரைப்படமான ‘மறவன்’ வரும் செப்டம்பர் 30-ம் தேதி, வெள்ளிக்கிழமை, சென்னை வடபழனியில் உள்ள ஆர்கேவி ஸ்டூடியோசில், மாலை 6 மணிக்கு, திரையீடு காணவுள்ளது.
தமிழ் சினிமாவின் பல முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்கவுள்ள இந்த சிறப்புக் காட்சியில், எஸ்.டி.புவனேந்திரனின் குருவான இயக்குநர் ராஜா மோகன், அவரது தந்தை தயாரிப்பாளர் எடிட்டர் மோகன் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
எஸ்டி புவனேந்திரன் இயக்கத்தில் உருவான ‘மறவன்’ திரைப்படத்தில், நடிகர் ஹரிதாஸ், அஸ்ட்ரோ குமரேசன், டேனிஸ் குமார், சங்கீதா கிருஷ்ணசாமி, சீலன், புஷ்பா நாராயண், லோகநாதன், மனோ ஷான் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
நியூயார்க் / தாக்காவில் நடைபெற்ற அனைத்துலக திறந்தவெளி திரைப்பட விழா 2016-ல், மலேசியப் படமான ‘மறவன்’, ‘COUNTRY BEST AWARD’ என்ற அனைத்துலக விருதை வென்றுள்ளது.
மேலும், இந்த வருடத்திற்கான, மெல்பர்ன் ஃபீனிக்ஸ் பிலிம் பெஸ்டிவலில், அரையிறுதி வரைக்கும் தேர்வாகி மலேசியாவிற்குப் பெருமை சேர்த்துள்ளது.
பார்சிலோனா, ரஷியா, சிங்கப்பூர் மற்றும் ஹாலந்து ஆகிய நாடுகளில் நடைபெற்ற திரைப்பட விழாக்களிலும் மறவன் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.