Home கலை உலகம் ஆசான்.. மகளை மீட்கும் ஒரு தந்தையின் போராட்டம்: இயக்குநர் எஸ்.டி.புவனேந்திரன்

ஆசான்.. மகளை மீட்கும் ஒரு தந்தையின் போராட்டம்: இயக்குநர் எஸ்.டி.புவனேந்திரன்

1703
0
SHARE
Ad

Haridhass Aasaanகோலாலம்பூர் – ‘மறவன்’ திரைப்படத்தின் வெற்றியையடுத்து, எஸ்.டி.புவனேந்திரன், ஹரிதாஸ் கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் புதிய திரைப்படமான ‘ஆசான்’ வரும் நவம்பர் 30-ம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியாகிறது.

‘ஒளி’, ‘உணர்வு’ ஆகிய திரைப்படங்களைத் தயாரித்த நோவா ரிபுன் டத்தோ என்.கே.சுந்தரம் இத்திரைப்படத்தைத் தயாரித்திருக்கிறார்.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் நேற்று செவ்வாய்க்கிழமை வெளியானது.

#TamilSchoolmychoice

இத்திரைப்படத்தின் கதாநாயகன் ஹரிதாசுடன், சசிதரன், சீலன் மனோகரன், சரேஸ் டி செவன், சசிதரன் கே ராஜூ, புஷ்பா நாராயண், நஸ்ரியா இப்ராகிம் உள்ளிட்ட பிரபல நடிகர்களும் இணைந்து நடித்திருக்கின்றனர்.

இத்திரைப்படத்தில் கணிதமேதையாக நடித்திருக்கும் ஹரிதாஸ், தனது மகளை எதிரிகளிடமிருந்து மீட்பதற்காக எடுக்கும் விஸ்வரூபமே படத்தின் முக்கியக் கருவாக இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்திருக்கின்றனர்.

HaridhassSDPuvanendran

(படப்பிடிப்பில் நடிகர் ஹரிதாசுடன், இயக்குநர் எஸ்.டி.புவனேந்திரன்)

இது குறித்து இயக்குநர் எஸ்.டி.புவனேந்திரன் கூறுகையில், “சமூகத்தில் ஒரு மரியாதைக்குரிய இடத்தில் இருந்து வரும் கணித மேதையின் மகள் பேராபத்தில் சிக்குகிறார். அப்படிப்பட்ட சூழ்நிலையில், அவரது தந்தையான கணிதமேதை தனது மகளை மீட்க என்னவெல்லாம் செய்வார்? தனது நுட்பமான அறிவைப் பயன்படுத்தி எப்படி ஆபத்தில் இருந்து மீட்கிறார்? என்பதே படத்தின் கதைக்கரு”

“அவர் போராடும் விசயம் மலேசியாவில் மட்டுமல்ல. உலகளவில் கவனிக்கப்பட வேண்டிய விசயமாக இருக்கும். அந்த விசயத்தை நாம் அதிகம் கேட்டிருப்போம் என்றாலும் அதனை அலட்சியப்படுத்தி கடந்து சென்றிருப்போம். அது இத்திரைப்படத்தில் சொல்லப்பட்டிருக்கிறது” என எஸ்.டி.புவனேந்திரன் தெரிவித்தார்.

இத்திரைப்படத்தில் இடம்பெறும் பாடல்களை, ஜித்திஸ், ஜெயா ஈஸ்வர், பாலன்ராஜ்-ஜெகதீஸ் ஆகியோர் இசையமைத்திருக்கின்றனர்.

‘ஆசான்’ திரைப்படம் குறித்த மேல்விவரங்களை அதன் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் பார்வையிடலாம்:-

https://www.facebook.com/aasaanthemovie/