நியூயார்க் – இன்று செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணிக்குத் தொடங்கிய அமெரிக்க அதிபர் வேட்பாளர்கள் டொனால்ட் டிரம்ப், ஹிலாரி கிளிண்டன் இடையிலான நேரடி விவாதத்தின் போது பல தருணங்களில் இருவரும் ஒருவரை ஒருவர் நேரடியாகத் தாக்கிக் கொண்டனர்.
அந்த விவாதத்தின் போது நிகழ்ந்த சில முக்கிய கருத்து மோதல்கள்:-
- அமெரிக்காவின் மோசமான பொருளாதார நிலைக்கு கடந்த 30 ஆண்டுகளாக ஹிலாரி போன்ற அரசியல்வாதிகளின் திட்டங்களும், சிந்தனைகளும்தான் காரணம் என்றும் தன்னைப் போன்ற வணிக நிபுணர்களால்தான் அமெரிக்காவின் இன்றைய நிலைமையைச் சீரமைக்க முடியும் என்றும் டிரம்ப் கூறினார்.
- அதற்கு பதிலடி கொடுத்த, ஹிலாரி, கடந்த பல ஆண்டுகளாக டிரம்ப் தனது வருமானவரி அறிக்கையைத் தாக்கல் செய்யவில்லை என்றும், இதற்குக் காரணம் அவர் கூறுவது போல் அவரது நிதி நிலைமை வலுவாக இல்லை என்றும், அவருக்கு வங்கிகளில் 650 மில்லியன் கடன்கள் இருப்பதாகவும் குற்றம் சாட்டினார். அவரது வருமான வரி நிலைமையைத் தெரிந்து கொள்ள மக்களுக்கு உரிமை இருக்கிறது என்றும் அந்த விவரங்களை அவர் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்றார் ஹிலாரி.
- தான் சட்டக் கட்டுப்பாடுகளின் காரணமாக தனது வருமான வரி விவரங்களை அறிவிக்க முடியாத நிலைமையில் இருப்பதாகக் கூறிய டிரம்ப், ஹிலாரி 33,000 இணைய அஞ்சல்களை வெளியிட்டால் தானும் தனது வருமான வரி விவரங்களை வெளியிடத் தயார் என்று கூறினார்.
- மேலும் டிரம்ப் பல ஆண்டுகளாக பலருக்கு முறையான சம்பளம் கொடுக்கவில்லை, தனக்கு விநியோகிக்கப்பட்ட பொருட்களுக்கு கட்டணம் செலுத்தவில்லை எனவும் ஹிலாரி குற்றம் சாட்டினார்.
- அமெரிக்க விமான நிலையங்கள் மூன்றாம் நாடுகளில் விமான நிலையங்களைப் போல் இருக்கின்றன என ஒரு கட்டத்தில் டிரம்ப் கிண்டலடித்தார். துபாய், கத்தார் போன்ற விமான நிலையங்கள் அற்புதமாக இருக்கின்றன இருக்கின்றன ஆனால் நியூயார்க், சிக்காகோ விமான நிலையங்கள் மூன்றாம் நாடுகளின் விமான நிலையங்களைப் போல் இருக்கின்றன என்ற டிரம்புக்கு பதில் கொடுத்த ஹிலாரி உங்களைப் போன்றவர்கள் வருமான வரி கட்டாததால்தான் இதுபோன்ற நிலைமை ஏற்பட்டது என்றார்.
விவாதம் தொடங்குவதற்கு முன்பாக பில் கிளிண்டனும், மெலானி டிரம்பும் கைகுலுக்கிக் கொண்டபோது….
- இன்னொரு கட்டத்தில் டிரம்ப் 6 முறை வணிக ரீதியாக திவால் ஆனதாக அறிவித்துக் கொண்டவர் என்றும் ஹிலாரி நேரடியாக சுட்டிக் காட்டினார்.
- 33,000 இணைய அஞ்சல்கள் தனது தனிப்பட்ட இணைய முகவரி வழி அனுப்பப்பட்டது குறித்துப் பேசிய ஹிலாரி அதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாகவும், இப்போது வாய்ப்பு கிடைத்தால் அந்த விவகாரத்தை நான் வேறு விதமாகக் கையாண்டு இருப்பேன் என்றும் ஹிலாரி கூறினார்.
- பல தருணங்களில் டிரம்ப் சீனாவைத் தாக்கிப் பேசினார். அமெரிக்காவின் பொருளாதார நலிவுக்கும், வேலைவாய்ப்பு இழப்புகளுக்கும் சீனாதான் காரணம் என்றும் ஆனால், அமெரிக்கத் தலைமைத்துவம் அதனை எதிர்த்துப் போராடவில்லை என்றும் டிரம்ப் குற்றம் சாட்டினார்.
- முஸ்லீம் நாடுகளுடன் நாம் இணைந்து இணக்கமாக பணியாற்ற வேண்டும் என்று கூறிய ஹிலாரி பல தருணங்களில் டிரம்ப் முஸ்லீம்களைப் பற்றித் தாக்கிப் பேசியும், முஸ்லீம் நாடுகளைப் பற்றித் தரக் குறைவாகவும் பேசி வருகின்றார் என்றார்.
- ஹிலாரிக்கு அதிபராகக் கூடிய தோற்றமும் இல்லை, உடல் வலிமையும் இல்லை என டிரம்ப் கூறினார்.
- “நான் 112 நாடுகளுக்கு வெளியுறவு அமைச்சராகப் பயணம் செய்து பல உடன்படிக்கைகளை விவாதித்து முடிவு கண்டிருக்கின்றேன். பல மணி நேரம் நாடாளுமன்ற கூட்டங்களில் கலந்து கொண்டு பதிலளித்துப் பேசியிருக்கின்றேன். இதுதான் எனது அனுபவம், உடல் வலிமை” என ஹிலாரி டிரம்புக்கு பதிலளித்தார்.
- ஹிலாரிக்கு அனுபவம் இருக்கிறது என்பதை நான் மறுக்கவில்லை – ஆனால் அது மோசமான அனுபவம் – அந்த அனுபவம் அமெரிக்காவுக்குத் தேவையில்லை என்று டிரம்ப் தெரிவித்தார்.
- பெண்களை பன்றி, நாய்கள் என மோசமாக, தரக் குறைவாக வர்ணித்தவர் டிரம்ப் என்றும் ஹிலாரி குற்றம் சாட்டினார்.
டிரம்ப்-ஹிலாரி மேடைத் தோற்றங்கள்
- கண்ணைப் பறிக்கும் சிவப்பு நிற ஆடையில் ஹிலாரி விவாதத்தில் பங்கேற்றார்.
- அமெரிக்க அதிபர் வேட்பாளர்கள் விவாதங்களின்போது வழக்கமாக சிவப்பு நிற கழுத்துப் பட்டை (டை) அணிவார்கள். ஆனால் அந்த வழக்கத்திற்கு மாறாக டிரம்ப், கறுப்பு நிற கோட்டும், நீல நிற கழுத்துப் பட்டையும் அணிந்து மேடையில் தோன்றினார்.
- சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கும் கூடுதலாக நீடித்தது இந்த விவாதம்.
- எதிர்வரும் நவம்பர் 8-ஆம் தேதி நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலுக்கு முன்பாக மேலும் இரண்டு விவாதங்கள் இருவருக்கும் இடையில் நடைபெறும் என்றும், மற்றொரு விவாதம் அமெரிக்க துணையதிபர்களுக்கான வேட்பாளர்களுக்கு இடையில் நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
விவாதம் யாருக்கு சாதகம்?
இருவருக்கும் இடையிலான விவாதங்களை வைத்துப் பார்க்கும்போது ஹிலாரியின் நிதானம், அனுபவம், அறிவாற்றல் ஆகியவை தெளிவாக அவரது விவாதங்களில் வெளிப்பட்டது எனலாம்.
ஆனால், ஹிலாரிக்கு இணையாக கம்பீரமாகவும், பிடி கொடுக்காமலும், வம்படியாகவும், பல கருத்துகளை முன்வைத்த காரணத்தால், டிரம்பும் ஹிலாரிக்கு இணையான, தகுதியான போட்டியாளராக டிரம்ப் தன்னைக் காட்டிக் கொண்டார்.
ஆனால், தன் மீதான நம்பகத்தன்மையை விவாதத்தின் முடிவில் டிரம்ப் நிலைநிறுத்திக் கொள்ளவில்லை என்றே தோன்றுகின்றது.
பல ஆண்டுகளாக வருமான வரி கட்டாதது, 6 முறை நிறுவன ரீதியாக திவால் ஆனதாக அறிவித்தது, தனது தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்காதது போன்ற அம்சங்களால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள – கேள்விக் குறியாகியுள்ள – டிரம்பின் நம்பகத் தன்மை, நேர்மை ஆகியவை குறித்து போதிய விளக்கங்களை, தெளிவுகளை இந்த விவாதத்தின் மூலம் டிரம்ப் முன் வைக்கவில்லை என்பதுதான் இந்த விவாதத்தைக் கேட்டவர்களின் தீர்ப்பாக இருக்க முடியும்.
-தொகுப்பு: இரா.முத்தரசன்