Home Featured தமிழ் நாடு தமிழகப் பார்வை: வாசனின் முதிர்ச்சியற்ற அரசியலால் மீண்டும் தனித்து விடப்படும் த.மா.கா!

தமிழகப் பார்வை: வாசனின் முதிர்ச்சியற்ற அரசியலால் மீண்டும் தனித்து விடப்படும் த.மா.கா!

920
0
SHARE
Ad

g.k.vasan

சென்னை – காங்கிரசிலிருந்து பிரிந்து தனிக்கட்சி கண்ட ஜி.கே.வாசன் தனது முதிர்ச்சியற்ற அரசியல் அணுகுமுறைகளால் அடுத்தடுத்து, பின்னடைவுகளையும், அவமதிப்புகளையும் சந்தித்து வருகின்றார். இதன் காரணமாக, தற்போது உள்ளாட்சித் தேர்தல்களில் அவரது தமிழ் மாநிலக் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் சிக்கலான நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளார் வாசன்!

கடந்த தமிழக சட்டமன்றத் தேர்தல்களிலும் இதே போன்ற முதிர்ச்சியற்ற அணுகுமுறையைக் கையாண்டார் வாசன். திமுக, அதிமுக என கூட்டணிக்கு அவர் மாறி, மாறி, அலைந்தது பத்திரிக்கைகளில் பகிரங்கமாகச் சுட்டிக் காட்டப்பட்டது.

#TamilSchoolmychoice

stalin1_1இறுதியில், அவர் மக்கள் நலக் கூட்டணியில் இணைந்தார். கடைசி நேரத்தில் அவர் வேறு வழியின்றிதான் மக்கள் நலக் கூட்டணியில் ஐக்கியமாகியுள்ளார் என்பது யாரும் சொல்லாமலேயே பட்டவர்த்தனமாக தெரிந்தது.

அதே சமயம், சட்டமன்றத் தேர்தல்கள் முடிந்ததும், முதல் ஆளாக மக்கள் நலக் கூட்டணியில் இருந்து வெளியேறினார். இதுவும் அவரது முதிர்ச்சியற்ற அரசியல் நிலைப்பாடாகப் பார்க்கப்படுகின்றது.

காரணம், மக்கள் நலக் கூட்டணி-தேமுதிக-தமாகா இணைந்த அமைப்பு சட்டமன்றத் தேர்தல்களில், அடைந்த தோல்விக்கு பல அரசியல் காரணங்கள் இருக்கின்றன. ஆனால், ஆடத் தெரியாதவன் மேடை கோணல் என்பதுபோல், ஏதோ, மக்கள் நலக் கூட்டணி இணைப்பினால்தான், தனது செல்வாக்கு குறைந்து விட்டது போல் காட்டிக் கொள்ள முற்பட்டார் வாசன்.

ஆனால், விரைவிலேயே வந்து விட்ட உள்ளாட்சித் தேர்தல்கள் வாசனை மேலும் ஓர் அவமதிப்புக்கு உள்ளாக்கி விட்டிருக்கின்றது.

karunanithi-thirunavukkarasu-meeting

திருநாவுக்கரசர் கலைஞரைச் சந்தித்தபோது….

செப்டம்பர் 19-ஆம் தேதி, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்த வாசன் திமுகவுடன் கூட்டணி அமைத்து, உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிடும் விருப்பத்தைத் தெரிவித்திருந்தார்.

இங்கேயும் வாசன் முதிர்ச்சியற்ற அரசியல் அணுகுமுறையைக் கையாண்டார். ஏற்கனவே, காங்கிரஸ், திமுக கூட்டணியில் இருக்கும் நிலையில், தமாகாவை ஏற்றுக் கொள்வார்களா என்பது குறித்த விவரங்களை முதலில் நன்கு கேட்டுத் தெரிந்து கொண்டு பின்னர் அவர் அறிவிப்பு விடுத்திருக்க வேண்டும்.

ஆனால் வாசன் ஸ்டாலினைச் சந்தித்த அதே நாளில், தமிழகக் காங்கிரசின் தலைவர் திருநாவுக்கரசர் திமுக தலைவர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்து, உள்ளாட்சித் தேர்தல்களில் மீண்டும் திமுக-காங்கிரஸ் கூட்டணி அமையும் என அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, சட்டமன்றத் தேர்தல்களில் எங்களோடு இணைந்த கட்சிகளோடு மட்டும்தான் கூட்டணி என திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிக்கைவிட, மீண்டும் தனித்து விடப்பட்டார் வாசன்.

வேறு வழியின்றி, தமாகா, உள்ளாட்சித் தேர்தல்களில் தனித்துப் போட்டியிடும் என வாசன் அறிவித்துள்ளார்.

இதற்கிடையில், தன்மீது இருக்கும் வழக்குகள் காரணமாக, காங்கிரசுடன் கூட்டணி என்பதைத்தான் கனிமொழி விரும்பினார் என்றும், அதற்கேற்பவே, கலைஞரும் முடிவெடுத்தார் என்றும் தமிழக ஊடகங்கள் ஆரூடங்கள் தெரிவித்துள்ளன.

ஆனால், ஸ்டாலினோ வாசனுடனும் கூட்டணி வைக்க விரும்பினார் என்கின்றன தமிழக அரசியல் வட்டாரங்கள்.

திமுக உட்கட்சிப் போராட்டம் – குறிப்பாக கலைஞர் வீட்டு குடும்பச் சண்டை- காரணமாகத்தான் தமாகா தனித்து விடப்பட்டது எனவும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இனி தனித்துப் போட்டியிட்டு, தன் கட்சியின் செல்வாக்கை நிரூபிக்க வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றார் வாசன்.

-இரா.முத்தரசன்