புதுடெல்லி – வண்டலூர் அறிஞர் அண்ணா வனவிலங்கு சரணாலயத்தில் பிறந்து, அங்கேயே தனது 5 வயது வரையில், தமிழ் கேட்டு வளர்ந்த ராமா என்ற புலி, தற்போது வட இந்தியாவின் உதய்பூர் சஜ்ஜன்கார் வனஉயிரியல் பூங்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு இந்தி மொழி தெரியாமல் தடுமாறி வருகின்றது.
பிறந்ததில் இருந்து தனது பராமரிப்பாளர் இடும் கட்டளைகளை தமிழிலேயே கேட்டுப் பழகியதால், உதய்பூரில் தனது புதிய பராமரிப்பாளர், இந்தியில் இடும் கட்டளைகளைக் கேட்டு புரியாமல் தவிக்கிறது என பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மத்திய வனவிலங்குகள் சரணாலய ஆணையத்தின் உத்தரவின் படி, உதய்பூர் சஜ்ஜன்கார் வன உயிரியல் பூங்கா நிர்வாகம், தங்களிடம் இருந்த இரண்டு ஓநாய்களை வண்டலூர் அறிஞர் அண்ணா வனவிலங்குகள் சராணாலயத்துக்கு வழங்கிவிட்டு, அதற்கு பதிலாக இந்த ராமா புலியை அழைத்துச் சென்றுள்ளது.
இந்நிலையில், புலி படும் பாட்டை உணர்ந்து, பூங்கா நிர்வாகம் ஒரு முடிவிற்கு வந்துள்ளது. அதாவது புலிக்கு மார்வாரி அல்லது ஹிந்தி மொழியில் கட்டளைகளைக் கற்றுக் கொடுக்க வேண்டும் அல்லது தமிழ் பேசத் தெரிந்த ஒரு பராமரிப்பாளரை நிர்ணயிக்க வேண்டும் என்ற முடிவில் இருக்கின்றது.