கோலாலம்பூர் – முன்னாள் மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் அணியினரின் முக்கியத் தலைவர்களும், கிளைத் தலைவர்களும், டத்தோ எஸ்.சோதிநாதன் தலைமையில் மீண்டும் மஇகாவில் இணைவார்கள் என்ற எதிர்பார்ப்பு இன்னும் முடிவில்லாமல் நீடித்துக் கொண்டிருக்கின்றது.
செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் பேச்சு வார்த்தைகளை வெற்றிகரமாக முடித்து, கட்சிக்கு வெளியில் நிற்கும் எஞ்சிய மஇகா கிளைகளை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வருவேன் என்றும் அப்படி முடியாவிட்டால், பேச்சு வார்த்தைகளில் இருந்து விலகி விடுவேன் என்றும் சோதிநாதன் மேடை நிகழ்ச்சி ஒன்றில் பகிரங்கமாக அறிவித்திருந்தார்.
ஆனால், செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் எந்தவித முடிவும் சோதிநாதன் தரப்பிலிருந்தோ, மஇகா தலைமையகத்தின் தரப்பிலிருந்தோ அறிவிக்கப்படவில்லை.
செப்டம்பர் 30-ஆம் தேதி, பழனிவேல் அணியினர், சங்கப் பதிகவகம் மற்றும் மஇகா தலைமையகத்திற்கு எதிராகத் தொடுத்திருந்த சதியாலோசனை வழக்கு மேல்முறையீட்டு நீதிமன்ற விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் செவிமெடுத்த நீதிபதிகள் தீர்ப்பை வேறொரு தேதிக்கு ஒத்தி வைத்திருக்கின்றனர்.
இந்த வழக்கு முடிவு தெரியாத காரணத்தினால், பேச்சு வார்த்தைகள் முடிவுக்கு வருவதிலும், பழனிவேல் அணித் தலைவர்களிடையே ஒருமித்த முடிவு எடுக்கப்படுவதிலும் தாமதங்கள் ஏற்பட்டுள்ளன என பழனிவேல் தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேல்முறையீட்டு தீர்ப்பு எப்படி இருக்கும்?
பழனிவேல் அணியினர் தொடுத்திருக்கும் சதியாலோசனை வழக்கின் மேல்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்பு எப்படி இருக்கும்?
இந்த வழக்கைக் கண்காணித்து வரும், வழக்கறிஞர்கள் இதுகுறித்துக் கூறும்போது, நீதிபதிகள் இரண்டு விதமான முடிவுகளை எடுப்பார்கள் என எதிர்பார்க்கலாம் என்றும் முதலாவது முடிவு, வழக்கைத் தள்ளுபடி செய்து அதே போன்ற தீர்ப்பை வழங்கிய உயர்நீதிமன்ற முடிவை அங்கீகரிப்பது என்றும் கூறுகிறார்கள்.
அல்லது, இரண்டாவது இன்னொரு முடிவாக, இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் முழு விசாரணை நடைபெறாமலேயே, பூர்வாங்க ஆட்சேபங்களின் அடிப்படையில் தள்ளுபடி செய்யப்பட்டதால், மீண்டும் இந்த வழக்கின் விசாரணை உயர்நீதிமன்றத்தில் நடைபெற வேண்டும் என்றும் மேல்முறையீட்டு நீதிபதிகள் உத்தரவிடலாம்.
தீர்ப்பு வழங்கப்படுவதற்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
அக்டோபர் 9-இல் தேசிய அளவில் பழனிவேல் அணித்தலைவர்கள் சந்திப்பு
பழனிவேல் அணியினர் நீதிமன்ற வழக்கு விசாரணை ஒன்றின்போது கூடிய கோப்புப் படம்
இதற்கிடையில், எதிர்வரும் அக்டோபர் 9-ஆம் தேதி பழனிவேல் அணியின் முக்கியத் தலைவர்கள் தேசிய நிலையில் கோலாலம்பூரில் ஒன்று கூடி தங்களின் அடுத்தகட்ட அரசியல் போராட்டங்கள் குறித்த முடிவுகளை எடுப்பார்கள் என பழனிவேல் தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஆனால், அதற்கு முன்பாக, தனது ஆதரவாளர்களோடு மீண்டும் மஇகாவில் சேரும் தனது முடிவை சோதிநாதன் அறிவிப்பாரா அல்லது அவரும் இந்த சந்திப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டு தனது கருத்துகளைத் தெரிவிப்பாரா என்ற விவாதங்கள் தற்போது பழனிவேல் தரப்பில் பரவி வருகின்றன.
மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம், பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் ஆகியோருடன் இதுவரையில் நடத்தப்பட்ட சந்திப்புகளின் விவரங்களை சோதிநாதன் தெரிவித்த பின்னரும், பழனிவேல் அணியின் முக்கியத் தலைவர்கள் பலர் அதனை ஏற்றுக் கொள்ளாமல், மீண்டும் மஇகாவுக்குள் திரும்ப விருப்பமில்லை என்று கூறிவிட்டார்களாம்.
எந்த முடிவுகளின் அடிப்படையில் மீண்டும் மஇகாவுக்கு திரும்புகிறோம் என்பது குறித்த தெளிவான, வரையறுக்கப்பட்ட தீர்வுகளை சோதிநாதன் முன்வைக்கவில்லை என்பதும், அவர் தனி ஒருவராகவே இந்தப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதால், அவர் என்ன பேசினார் என்ன முடிவெடுக்கிறார் என்பதை வைத்து மட்டும் நம்பிக்கையோடு எங்களால் வர முடியாது என்பதும் பழனிவேல் அணித் தலைவர்கள் ஒருசிலரின் வாதமாக இருக்கின்றது.
எத்தனை பேர் சோதிநாதன் பக்கம்?
இந்நிலையில், சோதிநாதன் ஒரு குழுவாக அல்லாமல், தனித் தனியாக பழனிவேல் அணியின் தலைவர்களையும், கிளைத் தலைவர்களையும் சந்தித்து தனது தரப்பு விளக்கங்களைத் தெரிவித்து வருகிறாராம்.
எனவே, கூடிய விரைவில், சோதிநாதன் தனது ஆதரவாளர்களுடன் மஇகாவுக்கு மீண்டும் திரும்பலாம் என்ற அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளிவரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த சூழ்நிலையில்தான், எதிர்வரும் அக்டோபர் 9-ஆம் தேதி பழனிவேல் அணியின் தலைவர்கள் கோலாலம்பூரில் முக்கிய சந்திப்புக் கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்து வருகின்றனர்.
அக்டோபர் 9-ஆம் தேதிக்கு முன்பாக சோதிநாதன் மஇகாவுக்குத் திரும்பும் தனது முடிவை அறிவிப்பாரா அல்லது அன்றைய தினம் நடைபெறும் சந்திப்புக் கூட்டத்தில் அவரும் கலந்து கொண்டு தனது தரப்பு வாதங்களை முன்வைப்பாரா என்ற எதிர்பார்ப்புகள் பழனிவேல் அணியினரிடையே தற்போது எழுந்துள்ளன.
பழனிவேல் அணியில் தற்போது செயல்பட்டு வரும் மஇகா கிளைத் தலைவர்கள், தொகுதித் தலைவர்களில் எத்தனைபேரை தன் பக்கம் இழுத்துக் கொண்டு சோதிநாதன் மஇகாவுக்கு திரும்புவார் என்பதும் மஇகா அரசியல் வட்டாரங்களில் ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்படும் மற்றொரு கேள்வியாகும்.
-இரா.முத்தரசன்