Home Featured தொழில் நுட்பம் ஐ-போன்களில் தமிழ் எண்கள்! பயனர்கள் பெருமிதம்!

ஐ-போன்களில் தமிழ் எண்கள்! பயனர்கள் பெருமிதம்!

2901
0
SHARE
Ad
iphone-tamil-numbersகோலாலம்பூர் – தமிழில் எண்கள் எழுதப்படும்போது 1,2,3 எனத் தோன்றும் தற்போதைய உரோமன் வடிவங்களிலேயே இன்று எழுதப்படுகின்றன.
இருப்பினும், தொன்மையான மொழியான தமிழில் எண்களுக்கும் தனிவடிவங்கள் உள்ளன என்பதையும், அவை சில பத்தாண்டுகளுக்கு முன்னும் வழக்கில் இருந்தன என்பதையும் பலர் அறிந்திருப்பர். டாக்டர் மு. வரதராசனாரின் திருக்குறள் தெளிவுரை நூலின் தொடக்கப் பதிப்புகளில், குறட்பாக்களின் எண்களையும், பக்கங்களின் எண்களையும் தமிழ் எண்களிலேயே காணலாம். 
தமிழ் எண்களைப் பயன்படுத்தி தமிழ்நாட்டிலும் மலேசியாவிலும் நாள்காட்டிகள் இன்றும் வெளிவருகின்றன. குறிப்பாக மலேசியாவில் கடந்த 10 ஆண்டுகளாகத் தமிழியல் ஆய்வுக் களம் தமிழ் எண்களைக் கொண்டு அச்சிடப்பட்ட நாள்காட்டியை வெளியிட்டு வருகின்றது.
tamil-numbers-calendar
தமிழ் எண்களைக் கொண்ட நாள்காட்டி…
தமிழ் எண்களைப் ‘பாதுகாக்க’ இதுபோன்ற சிறு முயற்சிகள் ஆங்காங்கே நடந்தாலும், வழக்கில் இல்லாததால் இந்த எண்களை அனைவராலும் எளிதில் புரிந்து கொள்ள இயலவில்லை.  
இன்றைய சூழலில் நமது தமிழ் எண்களை நாம் மறந்திருந்தாலும், தொழில்நுட்ப உலகம் மறக்கவில்லை!
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஆப்பிள் நிருவனத்தின் ஐஓஎஸ் 10-இல், பயனர்கள் தங்கள் பயன்பாட்டு மொழியாகத் தமிழைத் தேர்வு செய்வது மட்டுமல்லாமல், தொலைபேசி எண்கள் தமிழ் எண்களாகவே தோன்றுவதற்கான விருப்பத் தேர்வினையும் செய்து கொள்ளலாம்.
tamil-numbers-iphone
இந்த வசதி உலகம் எங்கும் அறிமுகமாகி வரும் ஐபோன்-7 திறன்பேசிகளில் இயல்பாகவே இடம் பெற்றிருக்கும்.  ஏற்கனவே ஐபோன்களை வைத்திருப்பவர்கள், ஐஓஎஸ்-10க்கு அவர்களின் இயங்குதளத்தை மேம்படுத்துவதன் வழி இந்தப் புதிய வசதியைப் பெற்றுக் கொள்ளலாம். செல்பேசிகளில் தமிழ் எண்கள் விருப்பத் தேர்வாக இடம் பெறுவது உலக அளவில் இதுவே முதல் முறை எனக் கருதப்படுகின்றது.
நட்பூடகங்களில் பயனர்கள் பெருமிதம்.
இந்த வசதியைப் பார்த்த ஐபோன் பயனர்கள் பலர், அவரவர் அடைந்த மகிழ்ச்சியையும், பெருமிதத்தையும் நட்பூடகங்களின் வழி பகிர்ந்து கொண்டு வருகின்றனர். முகநூலிலும், டுவிட்டரிலும், வாட்சாப், தெலிகிராம் குழுமங்களிலும், தமிழ் எண்கள் தோன்றும் ஐபோனின் திரைப்பிடிப்பு (screen shot) பகிர்ந்து கொள்ளப்பட்டது. கருத்துகளைக் கூறிய பலர், இதனை மகிழ்வோடு வரவேற்றனர்.
மலேசியாவின் பங்களிப்பு
Muthu Nedumaranஐபோனிலும் மெக்கிண்டாசுக் கணினிகளிலும் தமிழ் எழுத்துகளை வடிவமைத்தவர் மலேசியாவைச் சேர்ந்த கணிஞர் முத்து நெடுமாறன் (படம்) என்பதை பலரும் அறிவர். இது குறித்து அவரிடம் செல்லியல் வினவிய போது, 
“தமிழ் எண்களுக்கும் தமிழில் பயன்படுத்தப்பட்ட சுருக்கெழுத்துகளுக்கும் கணினிக்கான குறியீடுகளை வழங்க 2000மாம் ஆண்டிலேயே யூனிகோடு நிருவனத்திடம் பரிந்துரை செய்யப்பட்டது. பரிந்துரை செய்த குழுவிற்கு அப்போது நான் தலைமை ஏற்றிருந்தேன். ஏதோ வரலாற்று நோக்கத்திற்காக இந்தக் குறியீடுகளைச் சேர்க்கின்றோம் என்று அன்று பலர் நினைத்திருக்கக் கூடும். இன்று இவை மற்ற மொழி எண்களுக்கு நிகராகப் பயன்படுத்தப்படும் வாய்ப்பினைப் பெற்றுள்ளன என்று நினைக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.” 
என்று கூறிய அவர், மேலும்,
“ஆப்பிள் கணினிகளிலும், கையடக்கக் கருவிகளிலும் சேர்க்கப்பட்டுள்ள எமது ‘இணைமதி’ எழுத்துருவில் தமிழ் எண்களை இயல்பாகவே சேர்த்துவிட்டேன். செல்லினத்தில் உள்ள தமிழ்-99 விசைமுகத்திலும் இந்த எண்களைத் தட்டெழுவதற்கான வசதியையும் சேர்த்துவிட்டேன். இன்று அழைப்பு எண்களும் தமிழில் இடம்பெற்றிருக்கின்றன. இவற்றின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரிக்கும் என்றே நினைக்கிறேன்” என்று தனது எதிர்ப்பார்ப்பினைத் தெரிவித்தார்.  
தமிழ் எண்களை இனி அவ்வப்போதாவது கண்டு மகிழலாம் என்று நாமும் எதிர்ப்பார்ப்போம்!