சென்னை – கடந்த செப்டம்பர் 22-ம் தேதி முதல் சென்னை அப்போலோவில் சிகிச்சைப் பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையை அறிய இன்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானும், கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியனும் அப்போலோ மருத்துவமனைக்குச் சென்றனர்.
அங்கு, அவர்கள் ஜெயலலிதாவைச் சந்திக்க இயலாவிட்டாலும், சுகாதார அமைச்சர் மற்றும் நம்பிக்கைக்குரியவர்களைச் சந்தித்து, முதல்வரின் உடல்நிலை குறித்து அறிந்து வந்துள்ளனர்.
இது குறித்து சீமான் செய்தியாளர்களிடம் பேசுகையில், “முதல்வரின் உடல்நலத்தில் தொடர்ந்து நல்ல முன்னேற்றம் உள்ளதாக அமைச்சர்கள் தெரிவித்தனர். இதுதான் நம்பிக்கைக்கு உரியது. அதிகாரப்பூர்வமானது. எனவே வதந்திகளை நம்ப வேண்டாம்” என்று சீமான் கூறினார்.
தா.பாண்டியன் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், “முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை பார்த்தவர்களை நான் சந்தித்தேன். ஜெயலலிதாவை நேரில் பார்க்கவில்லை. நான் சந்தித்தவர்கள் நம்பிக்கைகுரியவர்கள். நலமுடன் இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.”
“முதல்வர் ஆரோக்கிய நிலையை எட்டிவிட்டாலும் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்கவேண்டும். தமிழக முதல்வர் குறித்து வெளியாகும் வதந்திகளை யாரும் நம்பவேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.