கோலாலம்பூர் – இன்று திங்கட்கிழமை அக்டோபர் 10ஆம் தேதி முதல், 13-ஆம் தேதி வரை அடுத்த நான்கு நாட்களுக்கு மலேசிய இடைநிலைப் பள்ளி மாணவர்கள் மூன்றாம் படிவத்துக்கான பி.டி.3 (P.T.3) தேர்வுகளை எழுதுகின்றனர்.
2014ஆம் ஆண்டு முதல், மூன்றாம் படிவத்துக்கான பிஎம்ஆர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அதற்கு மாற்றாக பி.டி.3 தேர்வுகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
பி.டி.3 தேர்வுகள் ஒரு தர நிர்ணயத் தேர்வுகளாக மட்டுமே நடத்தப்படுகின்றன என்பதால் இதில் தேர்ச்சி பெற முடியாதவர்களும் கூட தொடர்ந்து நான்காம் படிவத்தில் சேர்த்து தங்களின் கல்வியைத் தொடர முடியும்.
இதன் மூலம், நாட்டிலுள்ள பல மாணவர்கள் கடந்த காலங்களைப் போன்று பி.எம்.ஆர். தேர்வுகளில் தோல்வி கண்ட காரணத்தால், தங்களின் கல்வியைப் பாதியிலேயே முடித்துக் கொண்டு பள்ளியிலிருந்து வெளியேறும் நிலைமை இனியும் ஏற்பட வாய்ப்பிருக்காது.
இன்று தொடங்கும் பி.டி.3 தேர்வுகள் எழுதும் அனைத்து மாணவர்களும், சிறப்பாகத் தேர்ச்சி கண்டு தங்களின் கல்வியைச் சிறந்த முறையில் தொடர செல்லியல் குழுமம் சார்பில் எங்களின் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.