சென்னை – ‘சொல்வதெல்லாம் உண்மை’ சரஸ்வதி பூஜை சிறப்பு நிகழ்ச்சி, “நான் சொல்வதெல்லாம் உண்மை” என்ற தலைப்பில் இன்று திங்கட்கிழமை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.
‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியில் இடம்பெற்று அதன் மூலமாகப் பயனடைந்தவர்கள், நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டு அவர்கள் இந்நிகழ்ச்சி குறித்த தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்கள்.
அதில் நான்சி என்பவர் பேசுகையில், தனது அப்பா ஒரு குடிகாரர் என்றும், தினமும் அவர் குடித்துவிட்டு வரும்போது அவரை எப்படி கையாள வேண்டும் என்பதை சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியின் மூலமாகத் தான் தெரிந்து கொண்டதாகவும் கூறினார்.
அதனைக் கண்டு நெகிழ்ந்து போன லஷ்மி இராமகிருஷ்ணன், “இந்த நிகழ்ச்சியை நான் நடத்த ஆரம்பித்த போது, பல விமர்சனங்களையும், கேலிகளையும் எதிர்கொண்டேன். அப்போதெல்லாம் எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. இந்த நிகழ்ச்சியையே வேண்டாம் என்று விட்டுவிடலாமா? என்று கூட நினைத்தேன். ஆனால் 90 சதவிகித மக்கள் இந்த நிகழ்ச்சியை ரசிக்கிறார்கள். 10 சதவிகித மக்கள் மட்டுமே என்னை விமர்சிக்கிறார்கள். அதனால் அவர்களுக்குப் பயனளிக்கும் இந்த நல்ல நிகழ்ச்சியை நடத்தி வருகிறேன்” என்று கண்ணீர் சிந்திக் கூறினார்.
தன்னம்பிக்கையும், துணிச்சலும் நிறைந்த லஷ்மி, பிரபல தொலைக்காட்சி தன்னைத் தொடர்ந்து கேலியும், கிண்டலும் செய்த போதும் கூட, அதனை சட்டை செய்யாமல் தொடர்ந்து நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.