சென்னை – ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சி மூலம் பெண்களின் மனதில் இடம்பிடித்த அதேவேளையில், சில தரப்பினரின் கேலி கிண்டல்களுக்கும் ஆளானார் நடிகையும், இயக்குநருமான லஷ்மி ராமகிருஷ்ணன்.
இந்நிலையில், அவரைக் கேலி செய்தவர்களெல்லாம் வெட்கித் தலை குனியும் படியாக, ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் நடந்திருக்கிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ‘கிராமோதயம்’ என்ற மகளிர் சுய உதவிக் குழு, அவ்வட்டாரத்தைச் சேர்ந்த பெண்களின் முன்னேற்றத்திற்கு கடுமையாகப் பாடுபட்டு வருகின்றது. அதேவேளையில், மரம் நடுவது உள்ளிட்ட பொதுநலத் தொண்டுகளிலும் ஈடுபட்டு வருகின்றது.
அண்மையில் இந்த மகளிர் சுய உதவிக் குழுவின் சிறப்புத் தூதராக லஷ்மி இராமகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டு, விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இந்நிலையில், நேற்று மே 2-ம் தேதி, ‘கிராமோதயம்’ சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில், கலந்து கொண்ட லஷ்மிக்கு அவ்வட்டாரத்தைச் சேர்ந்த பெண்கள் அமோக வரவேற்பளித்தனர்.
அதனைக் கண்டு நெகிழ்ந்து போன லஷ்மி, இது ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சிக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றி என்று தெரிவித்திருக்கிறார்.
“கவர்ச்சியாக நடிக்கும் கதாநாயகி அல்ல, இரட்டை அர்த்த வசனங்களைப் பேச இயலாது, படத்தில் புகைத்துக் கொண்டோ, குடித்துக் கொண்டோ, ஜோக்குகளை அடிக்கும் கதாநாயகன் கிடையாது. ஆனால் மக்கள் என்னை மிகவும் நேசிக்கின்றனர். என்னைக் கேலி செய்தவர்களுக்கு இது ஒரு சவுக்கடியாக இருக்கும்” என்று லஷ்மி நெகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார்.
இந்நிகழ்ச்சியில், 5000 மரக்கன்றுகள் வழங்கப்பட்டதோடு, கிராமப்புறப் பெண்களில் குறிப்பிட்ட துறையில் சாதித்தவர்களும் கௌரவிக்கப்பட்டிருக்கிறார்கள்.
ஜீ தொலைக்காட்சியில் லஷ்மி நடத்தி வரும் ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சி தமிழ்நாட்டில் பட்டி தொட்டியெல்லாம் இப்போதும் மிகவும் ரசித்துப் பார்த்து வரும் ஒரு நிகழ்ச்சியாகும்.
மேலும், யூடியூப் இணைப்பு வாயிலாக வெளிநாடுகளிலும் பெண்கள் அந்நிகழ்ச்சிகளை பார்த்து ரசித்து வருகின்றனர்.
இந்நிகழ்ச்சியில், பாதிக்கப்பட்டவர்கள் தாங்கள் அடைந்த துன்பத்தைக் கூறும் போது, அதைக் கேட்டு மிகவும் உணர்ச்சிவசப்படும் லஷ்மி, அதனை வார்த்தைகளாகவோ, சைகைகளாகவோ வெளிப்படுத்துவார்.
அதனைத் தனியார் தொலைக்காட்சி ஒன்று சில காமெடியன்களை வைத்து தொடர்ந்து கிண்டலடித்து வந்தது. லஷ்மி கூறிய வார்த்தை பிரபலமாகி அதை வைத்து ஒரு பாடல் கூட வந்தது.
முதலில் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் இருந்த லஷ்மி, நாளாக நாளாக கிண்டல் அதிகமாகவே ஒரு கட்டத்தில் கொதித்து எழுந்ததோடு, சம்பந்தப்பட்டவர்களை நேரடியாகவே விமர்சிக்க ஆரம்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-செல்லியல் தொகுப்பு