புத்ரா ஜெயா – மலேசிய நாட்டின் உச்ச நீதிமன்றமான கூட்டரசு நீதிமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடந்து முடிந்த, முன்னாள் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் மேல்முறையீட்டு விசாரணை, அவரது ஆதரவாளர்களிடத்திலும், பிகேஆர் கட்சி உறுப்பினர்களிடத்திலும், அரசியல் வட்டாரங்களிலும், மீண்டும் ஒருமுறை மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
வழக்கு நடப்பதற்கு முதல் நாள் செவ்வாய்க்கிழமை இரவு, அன்வாரின் இல்லத்தில் அவரது குடும்பத்தினர், அன்வாரின் மனைவி வான் அசிசா தலைமையில் சிறப்பு பிரார்த்தனை தொழுகையை நடத்தியிருக்கின்றனர்.
நீதிமன்ற வளாகத்தில், அன்வாரின் பிள்ளைகள், அன்வார் விடுதலையைக் கோரும் பதாகைகளை ஏந்தி நின்ற காட்சி…
ஏற்கனவே, அன்வார் இப்ராகிமின் மேல்முறையீட்டை விசாரித்த கூட்டரசு நீதிமன்றம், அவர் மீது விதிக்கப்பட்ட 5 ஆண்டு தண்டனையை உறுதி செய்திருந்தது. அதன்பின்னர், மலேசிய சட்டங்களின்படி மாமன்னரிடம் அன்வார் சமர்ப்பித்த கருணை மனுவும் நிராகரிக்கப்பட, மீண்டும் தனது வழக்கை மறு ஆய்வு செய்ய வேண்டுமென கூட்டரசு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார் அன்வார்.
பொதுவாக இதுபோன்ற மறு ஆய்வு வழக்குகளை கூட்டரசு நீதிமன்றம் வரவேற்று, விசாரிப்பதில்லை. மிகவும் வலுவான காரணங்கள் இருந்தால் மட்டுமே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
நீதிபதிகள் அமர்வு – வழக்கறிஞர்கள் குழு
முன்னாள் நீதிபதியாகப் பணியாற்றியவரும், நாட்டின் மிகச் சிறந்த சட்ட நிபுணர்களில் ஒருவராகக் கருதப்படுபவருமான கோபால் ஸ்ரீராம் (படம்) அன்வாரைப் பிரதிநிதித்து, நேற்றைய வழக்கில் தனது வாதங்களை முன்வைத்தார்.
ஸ்ரீராமின் வழக்கறிஞர் குழுவில் அமெரிக்காவின் அனைத்துலக மனித உரிமை வழக்கறிஞர் கிம்பர்லி மோட்லியும் இடம் பெற்றுள்ளார்.
மேலும், மறைந்த கர்ப்பால் சிங்கின் மகள் சங்கீத் கவுர், என்.சுரேந்திரன், சிவராசா ராசையா, லத்திபா கோயா, கோபிந்த் சிங் டியோ உள்ளிட்ட பத்து வழக்கறிஞர்கள் ஸ்ரீராம் தலைமையிலான வழக்கறிஞர் குழுவில் இடம் பெற்றிருந்தனர்.
மலாயாவின் தலைமை நீதிபதி சுல்கிப்ளி அகமட் மகினுடின், சபா, சரவாக்குக்கான தலைமை நீதிபதி ரிச்சர் மலாஞ்சும், ஹாசான் லா, அபு சபா நோர்டின், சஹாரா இப்ராகிம், ஆகிய ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு நேற்றைய வாதங்களை செவிமெடுத்தது.
அரசாங்கத் தரப்பில் அரசு தலைமை வழக்கறிஞர் அலுவலகத்தின் விசாரணைகள் பிரிவின் தலைவர் அகமட் கமால் முகமட் ஷாஹிட் தலைமையிலான வழக்கறிஞர்கள் இடம் பெற்றிருந்தனர்.
ஏறத்தாழ ஒரு வருடம் 8 மாதங்களுக்கு முன்னால், 5 நீதிபதிகள் கொண்ட அரிபின் ஜக்காரியா தலைமையிலான கூட்டரசு நீதிமன்ற அமர்வு உறுதிப்படுத்திய அன்வார் மீதான குற்றச்சாட்டையும், தண்டனையையும் மறு ஆய்வு செய்ய வேண்டும் என்பதுதான் அன்வார் தரப்பின் மேல்முறையீடு.
முன்வைக்கப்பட்ட வாதங்கள் என்ன?
அன்வார் மீது தண்டனை விதிக்கப்பட்டதும் தொடர்ந்து நடந்தேறிய இரண்டு சம்பவங்கள் அவருக்கு எதிரான அரசியல் சதிவலை பின்னப்பட்டிருந்தது என்பதை உறுதி செய்தது என ஸ்ரீராம் வாதிட்டார்.
முதலாவது கூட்டரசு நீதிமன்றத் தீர்ப்பு வெளியான 15 நிமிடங்களிலேயே பிரதமர் துறை அலுவலகம் வெளியிட்ட “மலேசிய நீதிநிர்வாகம் சுதந்திரமானது” என்ற அறிக்கையாகும். அவ்வளவு விரைவாக அவர்கள் அறிக்கை விட்டதற்குக் காரணம், நீதிமன்றத்தின் முடிவு அவர்களுக்கு ஏற்கனவே தெரிந்திருந்தது என்பதாகும்.
பிரதமர் நஜிப்பின் பத்திரிக்கை செயலாளர் தெங்கு சரிபுடின், தெங்கு அகமட் மத்திய அரசாங்கம், அன்வாரின் கூட்டரசு மேல்முறையீட்டு மறு ஆய்வை எதிர்க்கின்றது என சத்திய பிரமாணத்தையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கின்றார் என்பதையும் ஸ்ரீராம் சுட்டிக் காட்டினார். “அம்னோவும், அரசாங்கமும் இந்த சதியில் ஈடுபடவில்லை என்றால் பின் ஏன் அவர்கள், அன்வாரின் கூட்டரசு மேல்முறையீட்டு மறு ஆய்வை எதிர்க்கின்றார்கள்?” என்றும் ஸ்ரீராம் கேள்வி எழுப்பினார்.
அன்வார் விடுதலையானால் ஓர் அறிக்கை, தண்டனை பெற்றால் மற்றொரு அறிக்கை என இருவேறு அறிக்கைகளை பிரதமர் அலுவலகம் முன்கூட்டியே தயாரித்தது என தெங்கு சரிபுடின் கூறியிருந்தாலும், அன்வார் விடுதலையானால் விடுக்கப்படவிருந்த மற்றொரு அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என்பதால் தெங்கு சரிபுடினின் சத்திய பிரமாணம் குறைபாடு கொண்டது என்றும் ஸ்ரீராம் குறிப்பிட்டார்.
நீதிமன்ற வழக்கு தீர்ப்புகளில் அரசாங்க சார்பில் இதுபோன்ற அறிக்கைகள் இதற்கு முன் விடுக்கப்பட்டதில்லை என்பதையும் ஸ்ரீராம் சுட்டிக் காட்டினார்.
ஷாபி அப்துல்லா – அம்னோவின் ஈடுபாடு
இரண்டாவது சம்பவம், அன்வார் மீதான தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர் தற்காலிக அரசாங்க வழக்கறிஞராகச் செயல்பட்ட முகமட் ஷாபி அப்துல்லாவின் (படம்) நடவடிக்கைகளாகும்.
அம்னோ இளைஞர் பகுதி ஏற்பாடு செய்த பிரச்சாரக் கூட்டங்களில் கலந்து கொண்ட ஷாபி அப்துல்லா, நீதிமன்றத்தில் இரகசியமாக நடத்தப்பட்ட விசாரணை விவகாரங்களைப் பகிரங்கமாக அந்தக் கூட்டங்களில் பேசினார்.
“இதன்மூலம் அன்வாரின் சிறைவாசத்தால் அம்னோ கட்சி உற்சாகம் அடைந்தது என்பது தெளிவாகத் தெரிய வந்தது. மேலும் புகார்தாரர் முகமட் சைபுல் புகாரி அஸ்லானும், ஷாபி அப்துல்லாவும் ஜூன் 2008ஆம் காலகட்டத்தில், அன்வார் ஈடுபட்டதாக கூறப்படும் ஓரினப் புணர்ச்சி சம்பவம் நடப்பதற்கு 2 நாட்களுக்கு முன்பாக அப்போது துணைப்பிரதமராக இருந்த நஜிப்பின் இல்லத்தில் காணப்பட்டனர்” என்று வாதிட்ட ஸ்ரீராம், ஷாபிக்கும் அம்னோவுக்கும் இடையிலான நெருக்கமான தொடர்பால், ஷாபி தற்காலிக அரசாங்க வழக்கறிஞராக நியமிக்கப்பட்டதும், தவறான ஆதாரங்களைக் கொண்டு அன்வார் மீது வழக்கை நடத்தியதும் முன்கூட்டியே திட்டமிடப்பட்டதாகும் என்றும் கூறியிருக்கிறார்.
இதன் மூலம் ஷாபி ஒரு கைப்பொம்மையாக செயல்பட்டார் என்பதும் அவரை ஆட்டுவித்த ஆட்டக்காரர் வேறொரு இடத்தில் இருந்தார் என்பதும் தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னரே வெளிச்சத்துக்கு வந்தது என்றார் ஸ்ரீராம்.
மேற்கண்ட வாதங்களைத் தவிர, அன்வார் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஓரினப் புணர்ச்சி சம்பவம் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களில் காணப்பட்ட முரண்பாடுகளையும் ஸ்ரீராம் சுட்டிக் காட்டியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து அரசாங்கத் தரப்பிலும் ஏன் அன்வார் விடுதலை செய்யப்படக்கூடாது என்பது குறித்து சில வாதங்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.
இரு தரப்பின் வாதங்களையும் செவிமெடுத்த பின்னர், தீர்ப்பை அவசரம் அவசரமாக வெளியிட விரும்பவில்லை எனக் கூறிய தலைமை நீதிபதி, மற்றொரு தேதிக்கு தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளார்.
தீர்ப்பு என்னவாக இருக்கும்?
தீர்ப்பு கீழ்க்காணும் மூன்று வெவ்வேறு விதமான முடிவுகளைக் கொண்டு வரலாம் என வழக்கைக் கண்காணித்து வரும் வழக்கறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்:
(1) எதிர்தரப்பு வாதங்களை ஏற்று அன்வார் குற்றமற்றவர் என நீதிமன்றம் விடுதலை செய்யலாம். அவ்வாறு செய்யப்பட்டால், அன்வார் அடுத்த 14-வது பொதுத் தேர்தலில் மீண்டும் விரும்புகின்ற நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட முடியும்.
(2) அன்வாரின் குற்றத்தையும், தண்டனையையும் உறுதி செய்து தீர்ப்பு வழங்குவது. அவ்வாறு செய்தால், அன்வார் தனது சிறைவாசத்தைத் தொடர வேண்டியிருக்கும் என்பதோடு, சிறைவாசத்துக்கு முன்பாக விடுதலை செய்யப்பட்டாலும், பொதுத் தேர்தலில் போட்டியிட முடியாது.
(3) அன்வாரின் குற்றத்தை உறுதிப் படுத்தி, ஆனால் தண்டனைக் காலத்தை குறைத்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கலாம். அவ்வாறு செய்யப்பட்டால், அன்வார், உடனடியாக விடுதலை செய்யப்படலாம் என்றாலும், அவர் மீதான குற்றச்சாட்டு காரணமாக அவர் தேர்தலில் போட்டியிட முடியாது.
-இரா.முத்தரசன்