கோலாலம்பூர் – பிரதமர் நஜிப் இன்று பிற்பகல் நாடாளுமன்றத்தில் அறிவித்த 2017-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பொதுமக்களை அதிகம் ஈர்க்கும் அறிவிப்பாகத் திகழ்வது பிரிம் உதவித் தொகை உயர்த்தப்படுவதாகும்.
வரவு செலவுத் திட்ட உரையுடன் நாடாளுமன்றம் செல்லத் தயாராகும் நஜிப் – உடனிருப்பவர்கள், இரண்டாவது நிதியமைச்சர் மற்றும் நிதி அமைச்சின் உயர் அதிகாரிகள்…
பிரதமரின் வரவு செலவுத் திட்ட உரையில் இடம் பெற்ற மற்ற சில முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-
- அனைத்துப் பள்ளிகளுக்கும் நிதி ஒதுக்கீடுகள் செய்யப்படுகின்றன. இதில் தமிழ்ப் பள்ளிகளுக்கு, கல்வி மேம்பாட்டுக்காக, 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- மேலும்50 தமிழ்ப் பள்ளிகளில் பாலர் பள்ளி விரிவாக்கத் திட்டத்திற்காக கூடுதலாக 10 மில்லியன் ஒதுக்கப்படுகின்றது.
- மேலும் 50 மில்லியன் ரிங்கிட், இந்தியர்கள் தங்களின் கைத்திறன் பயிற்சிகளை மேம்படுத்திக் கொள்வதற்காக வழங்கப்படுகின்றது.
- 150 மில்லியன் ரிங்கிட் தெக்குன் போன்ற சிறு தொழில் கடன்களுக்காக இந்தியர்களுக்கு வழங்கப்படுகின்றது.
- மருத்துவர்களுக்கான பயிற்சித் திட்டம் (ஹவுஸ்மென்ஷிப்) கிடைக்காத 2,600 மருத்துவத் துறை பட்டதாரிகள் இனி குத்தகை அடிப்படையில் தங்களின் பயிற்சித் திட்டத்தைத் தொடர முடியும்.
தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்ட பிரதமர்
இந்தியர்கள் குறித்த அறிவிப்புகளை நஜிப் விடுத்துக் கொண்டிருந்தபோது, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் “தீபாவளி, தீபாவளி” எனக் குரல் கொடுத்து நினைவுபடுத்த, அதற்கு பதிலளித்த பிரதமர், “ஆம், விரைவில் தீபாவளி வருவதால், இந்தியர்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். விரைவில் முறுக்குகளை அவர்கள் நமக்காக தயாரித்துக் கொடுப்பார்கள் என நம்புகின்றேன்” என்று சிரித்துக் கொண்டே கூறினார்.
காந்தியின் கருத்தை மேற்கோள் காட்டிய நஜிப்
தனது உரையின் போது ” இந்த உலகத்தில் உண்மையான அமைதி வேண்டுமானால், குழந்தைகளுக்கு கல்வியைப் போதியுங்கள் என மகாத்மா காந்தி கூறியிருக்கின்றார்” என்று கூறிய நஜிப், அந்த அடிப்படையில் அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்கும் எனக் கூறினார்.
(மேலும் அறிவிப்புகள் தொடரும்)