Home Featured நாடு “தமிழ்ப் பள்ளிகளுக்கு இதுவே பொற்காலம்” – பன்னாட்டு தமிழாசிரியர் மாநாட்டில் டாக்டர் சுப்ரா பெருமிதம்!

“தமிழ்ப் பள்ளிகளுக்கு இதுவே பொற்காலம்” – பன்னாட்டு தமிழாசிரியர் மாநாட்டில் டாக்டர் சுப்ரா பெருமிதம்!

1229
0
SHARE
Ad

200-yr-tamil-kalvi-conf-subra-speech

சுங்கைப்பட்டாணி – இங்குள்ள ஏய்ம்ஸ்ட் பல்கலைக் கழக வளாகத்தில் மலேசியாவில் 200 ஆண்டு தமிழ்க் கல்வியை முன்னிட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கும் பன்னாட்டு தமிழாசிரியர் மாநாட்டில் கலந்து கொள்ளவும், பங்கேற்பாளர்களுடன் கலந்துரையாடவும் மஇகா தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் இன்று சனிக்கிழமை காலை வருகை தந்தார்.

கமலநாதனுக்கு பாராட்டு

#TamilSchoolmychoice

மாநாட்டில் உரையாற்றிய டாக்டர் சுப்ரா, மாநாட்டை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்த கமலநாதனைப் பாராட்டினார். கடந்த மூன்று ஆண்டுகளாக கமலநாதனின் பணிகளையும், வளர்ச்சியையும் பார்த்து வருவதாகவும், அவரது செயல்கள் கண்டு மகிழ்ச்சியடைவதாகவும் சுப்ரா கூறினார்.

200-yr-tamil-kalvi-conf-subra-elanchelian-jaspal

மாநாட்டில் கலந்து கொள்ள வருகை தந்த சுப்ராவுடன், ஏற்பாட்டுக் குழுத் தலைவர் வே.இளஞ்செழியன், மஇகா தேசிய உதவித் தலைவரும், மஇகா கெடா மாநிலத் தொடர்புக் குழுத் தலைவருமான டத்தோ ஜஸ்பால் சிங்…

“இன்று கல்வி அமைச்சில் துணை அமைச்சராக இந்தியர் ஒருவர் இடம் பெற்றிருப்பது நமக்குக் கிடைத்திருக்கும் அருமையான வாய்ப்பு. அதற்காக நாம் பாராட்டு தெரிவித்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தமிழ்ப் பள்ளிகள், தமிழ்க் கல்வி வளர்ச்சிக்காக, வெறுமனே குறை கூறிக் கொண்டிருக்காமல் தங்களின் பங்களிப்பை வழங்குபவர்கள்தான் நமக்கு வேண்டும். பள்ளி நிர்வாகங்கள், தலைமை ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள், ஆசிரியர்கள், என அனைத்துத் தரப்பினரும் சமுதாய நலன் ஒன்றை மட்டும் மனதில் வைத்து தங்களின் பங்களிப்பை வழங்க வேண்டும்” என்றும் சுப்ரா தனது உரையில் கேட்டுக் கொண்டார்.

“200 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழ் கற்பிக்கப்பட்ட பள்ளியில் படித்தேன்”

“200 ஆண்டுகளுக்கு முன்னால் எந்தப் பள்ளியில் தமிழ் முதன் முதலாக மலேசியாவில் கற்பிக்கப்பட்டதோ (பினாங்கு பிரி ஸ்கூல்) அதே பள்ளியில்தான் நானும் படித்தேன் என்பதில் பெருமைப்படுகின்றேன்” என பலத்த கரவொலிக்கிடையில் சுப்ரா தெரிவித்தார்.

200-yr-tamil-kalvi-conf-kamalanathan-speech

சுப்ராவின் மாநாட்டு வருகையின்போது வரவேற்புரையாற்றிய கல்வி துணை அமைச்சர் கமலநாதன்…

அதன் பின்னர், தமிழ் மொழி  எவ்வாறு மலேசியாவில் கற்பிக்கப்பட்டது என்பது குறித்தும், எப்படி பின்னர் தமிழ்ப்பள்ளிகளாக உருவெடுத்து அதன்மூலம் தமிழ்க் கல்வி எவ்வாறு பரவியது என்பது குறித்தும் சுப்ரா விரிவாக எடுத்துரைத்தார்.

முதன் முதலில் தமிழை வளர்க்க வேண்டும் என்ற அக்கறையைவிட மத ரீதியான பரப்புரைகளுக்காகத்தான் தமிழ் மொழி பயன்படுத்தப்பட்டது எனக் குறிப்பிட்ட சுப்ரா, இருப்பினும் காலப்போக்கில் அந்தக் காரணங்கள்தான் தமிழ் மொழி இந்நாட்டில் வேரூன்றுவதற்கும் காரணமாக அமைந்தது என்றார்.

“மத பரப்புரைகளுக்காக முதன் முதலில் தமிழ் பயன்படுத்தப்பட்டது”

200-yr-tamil-kalvi-conf-kamalanathan-garlanding-subraடாக்டர் சுப்ராவுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்கின்றார் கல்வி துணையமைச்சர் ப.கமலநாதன்…

“முதன் முதலில் தமிழ் மொழி, கல்வி அடிப்படையில் நாட்டில் அறிமுகப்படுத்தப்படவில்லை. மாறாக, தொழிலாளர் வளர்ச்சித் திட்டங்களின் ஒரு பகுதியாகத்தான் தமிழ் மொழி பயிற்றுவிக்கப்பட்டது. கூடுதலாகப் படித்து விட்டால் தோட்டங்களை விட்டு வெளியேறிவிடுவார்கள் என்ற அச்சத்தில், தோட்டங்களில் பணிபுரிபவர்களுக்கு குறைந்த பட்ச அடிப்படைக் கல்வி வழங்க வேண்டும், அதே சமயம், அதனைக் கொண்டு அவர்கள் தொடர்ந்து தோட்டங்களிலேயே வேலை செய்து வர வேண்டும் என்ற நோக்கத்தில்தான் தமிழ் மொழி பயிற்றுவிக்கப்பட்டது” என சுப்ரா தனதுரையில் விளக்கினார்.

200-yr-tamil-kalvi-conf-kamalanathan-subra-garlanded

மாநாட்டில் பொன்னாடை போர்த்தி  கௌரவிக்கப்பட்ட கமலநாதன், சுப்ரா… 

“1956-ஆம் ஆண்டில்தான், கல்விக்கான சட்டம் நாட்டில் உருவாக்கப்பட்டு, இரண்டு விதமான பள்ளிக் கல்வி முறைகள் – தேசியப் பள்ளிகள், தேசிய மாதிரிப் பள்ளிகள் – என நடைமுறைக்கு வந்தன. நமது தமிழ்ப்பள்ளிகளின் உருவாக்கமும் இந்தக் கல்விச் சட்டத்தின் அடிப்படையில்தான் நாட்டில் இடம் பெற்றது. இதுதான் நமது நாடு என முடிவு செய்த நமது முன்னோர்கள் – தலைவர்கள் – அதன் காரணமாக, தமிழ்க் கல்வியை இந்நாட்டில் நிலை நிறுத்தவும், வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லவும், பொறுப்பேற்றுக் கொண்டு பாடுபடத் தொடங்கினர்” என நமது முன்னோர்களின் பங்கையும் சுப்ரா மாநாட்டில் கலந்து கொண்டவர்களிடையே நினைவூட்டினார்.

இந்த அடிப்படையில், மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ச.சாமிவேலுவும், தமிழ்ப் பள்ளிகளின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டார் என்பதையும் சுப்ரா குறிப்பிட்டார். இருந்தாலும், சாமிவேலு காலத்தில் இருந்த பிரதமர்கள் போதிய ஒத்துழைப்பையும், உதவிகளையும் வழங்கவில்லை என்றும் சுப்ரா சுட்டிக் காட்டினார்.

நஜிப் தலைமைத்துவமே தமிழ்ப் பள்ளிகளின் பொற்காலம்

200-yr-tamil-kalvi-conf-subraமாநாட்டில் உரையாற்றும் டாக்டர் சுப்ரா…

நடப்பு பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் தலைமைத்துவ காலகட்டம்தான் தமிழ்ப் பள்ளிகளுக்கான பொற்காலம் எனக் குறிப்பிட்ட சுப்ரா, நஜிப் தலைமைத்துவத்தில்தான் வரவு செலவுத் திட்டத்திலும் தமிழ் பள்ளிகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் இடம் பெறுகின்றன, அதுமட்டுமின்றி, இந்தியர்களுக்கான தனியான திட்ட வரைவும் (புளூபிரிண்ட்) அறிமுகம் காண்கின்றது என பலத்த கரவொலிக்கிடையில் கூறினார்.

மேலும் 50 பாலர் பள்ளிகள் கூடுதலாக தமிழ்ப் பள்ளிகளுடன் இணைந்து இயங்கவிருப்பதால், இதன்மூலம் தமிழ்ப் பள்ளிகளில் பதிவு செய்து கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கையும் உயரும் என்றும் சுப்ரா நம்பிக்கை தெரிவித்தார்.

“பிரதமர் நஜிப் தமிழ்ப் பள்ளிகளுக்கு எவ்வளவோ செய்தாலும், பிரதமர்கள் வருவார்கள், போவார்கள். அதனால், இன்று தமிழ்க் கல்விக்கு வழங்கப்பட்டு வரும் சலுகைகள் அனைத்தும் அரசாங்கத்தின் நிரந்தரக் கொள்கைகளாக நிலைநிறுத்தப்பட வேண்டும் என நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றேன். அப்போதுதான், அடுத்த 200 ஆண்டுகளைக் கடந்தும் தமிழ்க் கல்வி இந்த நாட்டில் நீடித்திருக்கும் என்பதை நாம் உறுதி செய்ய முடியும்” என்றும் சுப்ரா தனது உரையில் மேலும் கூறினார்.

“சமுதாயத்திற்கு நல்லதை நினைக்காதவர்களை வீழ்த்துவோம்”

தனது உரையில் நிறைவாக, “நமது சமுதாயத்திற்காக நல்லதை நினைக்காதவர்கள் முன்னிலைப்படுத்தப்படும் நிலைமை உருவாகியுள்ளது” என வருத்தப்பட்ட சுப்ரா அத்தகையவர்கள் வீழ்த்தப்பட வேண்டும் என்றும் அதற்காகப் போராடுவதற்கு தான் தயார் என்றும் அந்ததப் போராட்டத்தில் நீங்களும் இணைய வேண்டும் என மாநாட்டு பங்கேற்பாளர்களைக் கேட்டுக் கொண்டார்.