Home Featured நாடு 2017-இல் பொதுத் தேர்தல்! வரவு செலவுத் திட்டம் தெளிவாகக் காட்டுகின்றது!

2017-இல் பொதுத் தேர்தல்! வரவு செலவுத் திட்டம் தெளிவாகக் காட்டுகின்றது!

786
0
SHARE
Ad

najib-budget-speech

கோலாலம்பூர் – அடுத்தாண்டு மலேசியாவின் 14-வது பொதுத் தேர்தல் நடைபெறுமா இல்லையா என்ற கேள்விக்கு “ஆம் நிச்சயம் நடைபெறும்” என அடித்துக் கூறும் அளவுக்கு பல அம்சங்கள் கடந்த வெள்ளிக்கிழமை (அக்டோபர் 21) பிரதமர் நஜிப் துன் ரசாக் சமர்ப்பித்த 2017-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இடம் பெற்றிருந்தன.

முதலாவதாக, அரசு ஊழியர்களுக்கு வாரிக் கொடுக்கப்பட்டிருக்கும் சலுகைகள். 1.6 மில்லியன் அரசு ஊழியர்கள்தான் பொதுத் தேர்தல்களில் எப்போதுமே அரசாங்கத்தின் பாதுகாப்பான வாக்கு வங்கி. அவர்களுக்கு சலுகைகளை வாரிக் கொடுப்பதன் மூலம், அவர்களின் வாக்குகளை அரசாங்கம் ஒவ்வொரு பொதுத் தேர்தலிலும், வரவு செலவுத் திட்டத்தின் மூலமாக கவர்ச்சிகரமான அறிவிப்புகளினால் கவர்ந்து வருவது வழக்கமான பாணி.

#TamilSchoolmychoice

அதோடு, அரசாங்கத்திற்கு எதிராக வாக்களித்தால், எங்கே கண்டு பிடித்து விடுவார்களோ, நமக்கு பதவி உயர்வுகள் கிடைக்காதோ என்பது போன்ற அச்சத்திலேயே அரசு ஊழியர்களும் எப்போதும் தேசிய முன்னணிக்கு வாக்களித்து வருவதும் மலேசிய அரசியலில் ஒவ்வொரு பொதுத் தேர்தலிலும் நிகழ்ந்து வருவதுதான்.

பிரதமரின் அறிவிப்பில், அரசு ஊழியர்களைக் குறிவைத்து, பல சலுகைகள் அளிக்கப்பட்டிருப்பதுதான், பொதுத் தேர்தல் வருகிறது என்பதற்கான தெளிவான அறிகுறிகளில் ஒன்று.

பாஸ் கட்சி ஆதரவாளர்களுக்குக் குறி

PAS-Logoதேசிய முன்னணி இந்த முறை பொதுத் தேர்தலில் வெற்றி கொள்வதற்கு பாஸ் கட்சியின் ஆதரவும், அதன் உறுப்பினர்கள், ஆதரவாளர்களின் ஆதரவும் கண்டிப்பாகத் தேவை.

அதற்கேற்ப பிரதமரின் உரையும் அவர்களைக் குறிவைத்தே தயாரிக்கப்பட்டிருந்தது. வரவு செலவுத் திட்ட அறிக்கை உரையில், பிரதமர் மறைந்த பாஸ் ஆன்மீகத் தலைவர் ஹருண் டின்னை, மருத்துவமனையில் இருந்த போது சந்திக்கச் சென்றதை விவரிப்பதும், அப்போது ஹருண் டின் கூறிய சில வாசகங்களை பிரதமர் திரும்பவும் கூற வேண்டியதன் அவசியமும் ஏன்?

ஹருண் டின்னுக்கு (படம்), அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தாலும், மால் ஹிஜ்ரா சிறப்பு விருதை இந்த முறை அரசாங்கம் அவருக்கு வழங்கி கௌரவித்தது என பிரதமர் தொலைக்காட்சி முன் அமர்ந்திருந்த இலட்சக்கணக்கான மக்களுக்கு நினைவுபடுத்த வேண்டியது ஏன்?

Harun-Din-Pas-Sliderஎல்லாம், பாஸ் ஆதரவாளர்களை குறிப்பாக இஸ்லாமிய ஈடுபாடு கொண்ட மக்களின் வாக்கு வங்கியை குறிவைத்துத்தான்!

இஸ்லாம் மத நடவடிக்கைகளுக்கும், இஸ்லாமியப் பள்ளிகள், மத போதனைகள் ஆகியவற்றுக்கும் கணிசமான நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவையெல்லாம் அரசாங்கம் இஸ்லாமிய வளர்ச்சி மீது கொண்டிருக்கும் அக்கறையை கூடுதலாக எடுத்துக் காட்டும் விதத்தில் பிரதமர் உரையும் அமைந்திருந்தது.

இந்த அணுகுமுறையும், பாஸ் ஆதரவு வாக்காளர்களை மனதில் வைத்து எடுக்கப்பட்ட அணுகுமுறைதான் என்பதும் தெளிவு.

பிரிம் தொகை உயர்வு

brim

சாதாரண, அடித்தட்டு மக்களின் வாக்குளை தேசிய முன்னணி ஈர்ப்பதில் பிரதமர் வழங்கி வரும் பிரிம் உதவித் தொகைகள் பெரும் பங்காற்றுகின்றன என்பதை மறுப்பதற்கில்லை. இந்த முறை பிரிம் உதவித் தொகை உயர்த்தப்பட்டிருப்பதும், பொதுத் தேர்தலை நோக்கிய தேசிய முன்னணியின் வியூகங்களில் ஒன்று என கருதப்படுகின்றது.

இந்தியர் வாக்குகளைக் குறிவைத்த வாசகங்கள்

பிரதமரின் வரவு செலவுத் திட்ட உரையில் பல அம்சங்கள் இந்தியர்களைக் குறிவைத்து சேர்க்கப்பட்டிருந்தன. தீபாவளி வாழ்த்து தெரிவித்தது, இந்தியர்களுக்கு அரசாங்கம் உதவி செய்யும் அவர்களும் தேசிய மேம்பாட்டில் இணைவதற்கு ஆவன செய்யும் என்ற அறிவிப்பு, பிரிம் தொகைக்காக ஓர் இந்திய மாது தன் கைப்பிடித்து நன்றி சொன்ன சம்பவத்தை விவரித்தது, தமிழ்ப் பள்ளிகள், இந்தியர்களுக்கான சிறு தொழில் கடன்கள் போன்றவற்றுக்கு கணிசமான நிதி ஒதுக்கீடுகள் – ஆகிய எல்லாவற்றையும் ஒன்றிணைத்துப் பார்க்கும்போதும், இது பொதுத் தேர்தலை இந்திய வாக்குகளை குறிவைக்கும் வரவு செலவுத் திட்டம்தான் என்பது நன்றாகத் தெரிகின்றது.

இந்த முறை பொதுத்தேர்தலில் மலாய் வாக்குகள் பிரிந்துகிடக்கும் சூழலில், சிறிய அளவே இருந்தாலும், இந்திய வாக்குகள் ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றியை நிர்ணயம் செய்வதில் முக்கியப் பங்காற்றும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பொருளாதார மந்தம்

அடுத்த ஆண்டு மலேசியா பொருளாதார சரிவை எதிர்நோக்கும், பொருளாதார மந்தம் ஏற்படும் எனப் பொதுவாக கணிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

எனவே, அடுத்தாண்டு மோசமான பொருளாதார மந்தம் ஏற்பட்டால், அதன் பின்னர் வரவு செலவுத் திட்டத்தில், பொருளாதாரத்தை வலுப்படுத்தும் விதமாக, மக்களுக்குப் பிடிக்காத சில அம்சங்கள் சேர்க்கப்பட வேண்டியிருக்கும். அதனால் 2018-இல் தேர்தல் நடத்தப்பட்டால் தேசிய முன்னணிக்குக் கிடைக்கக்கூடிய வாக்குகளும் பாதிக்கப்படலாம்.

பொருதார வீழ்ச்சிகளுக்கு தேசிய முன்னணி அரசாங்கம்தான் காரணம் என எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளும் வலுப்படலாம்.

எனவேதான், இந்த முறை மக்கள் குறைப்பட்டுக் கொள்ளும், புகார் செய்யும் வண்ணம், எந்தவித அறிவிப்புகளும் வெளியிடப்படவில்லை. வாடகை வண்டி ஓட்டுநர்கள், பிடிபிடிஎன் கடனால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் என சில தரப்புகளையும் நஜிப்பின் வரவு செலவுத் திட்ட சலுகைகள் சென்று சேர்ந்துள்ளன.

அரசியல் காரணங்கள்

mahathir-muhyiddin-comboஇவை தவிர, மற்ற சில வலுவான அரசியல் காரணங்களும் உள்ளன. மகாதீர்-மொகிதின் யாசின் கூட்டணியில் உருவாகியிருக்கும் கட்சியும், சபாவில் ஷாபி அப்டால் அமைத்திருக்கும் கட்சியும் கால ஓட்டத்தில் அரசியல் ரீதியாக வலுப் பெறுவதற்கு முன்பே பொதுத் தேர்தலை நடத்திவிட தேசிய முன்னணி வியூகம் வகுக்கும்.

நடந்து மஇகாவின் 70-வது பொதுப் பேரவையில் உரையாற்றிய அக்கட்சியின் தேசியத் தலைவர் டாக்டர் சுப்ரமணியமும், பொதுத் தேர்தல் அடுத்தாண்டு நடைபெறுவதற்கான வாய்ப்பு அதிகமிருக்கின்றது என பேராளர்களிடத்தில் நினைவுபடுத்தினார்.

அன்வார் விடுதலை

சிறையில் இருக்கும் அன்வார் இப்ராகிம் கூட்டரசு மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் செய்திருக்கும் மேல்முறையீடு மீதான தீர்ப்பும் விரைவில் வெளியாகவிருக்கின்றது. தீர்ப்பு சாதகமாக அமைந்து அன்வார் விடுதலையானால், அதன் பின்னர் அவர் நாடு தழுவிய அளவில் தீவிர பிரச்சாரங்கள் மேற்கொள்ள வாய்ப்பும், கால அவகாசமும் கொடுக்கக்கூடாது என்ற காரணத்தினாலும் அடுத்த ஆண்டே பொதுத் தேர்தலை தேசிய முன்னணி நடத்த முன்வரலாம்.

Anwar Mahathir 1

அப்படியே அன்வாருக்கு எதிராக தீர்ப்பு அமைந்தாலும், 2017-ஆம் ஆண்டின் இறுதிக்குள் அவரது தண்டனைக் காலம் முடிவடைந்து அவர் விடுதலையாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அவர் பொதுத் தேர்தலில் போட்டியிட முடியாது என்றாலும், அவரின் தீவிரமான பிரச்சாரங்கள் மக்களிடையே எடுபடும் என்பதால், அவரது விடுதலைக்கு முன்பாகவே பொதுத் தேர்தலை நடத்திவிட தேசிய முன்னணி திட்டமிடுகின்றது என்றும் சில அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றார்கள்.

அன்வார்-மகாதீர்-மொகிதின் இணைந்த கூட்டணி வலுவான ஒன்றாகவும், மலாய்க்கார வாக்குகளை ஈர்க்கும் அணியாகவும், அம்னோவைப் பிளவுபடுத்தும் சக்தியாகவும் பார்க்கப்படுகின்றது. அந்தக் கூட்டணியை மேலும் வளர விடக் கூடாது, ஆழமாக வேரூன்ற விட்டுவிடக் கூடாது – அதற்குள் பொதுத்தேர்தலை நடத்திவிட வேண்டும் என்ற எண்ண ஓட்டங்களும் அம்னோ தலைவர்களிடத்தில் பரவி வருகின்றது.

ஆக, இவ்வாறாக எல்லா அம்சங்களையும், ஒன்றிணைத்துப் பார்க்கும் போது, வரவு செலவுத் திட்டத்தில் காணப்பட்ட பொதுமக்களுக்கு சாதகமான பயன்கள், பிரதமரின் அரசியல் நோக்குடைய நாடாளுமன்ற உரை – என அனைத்தும் –

2017-இல் பொதுத் தேர்தல் நடைபெறும் என்பதையே சுட்டிக் காட்டுகின்றன!

-இரா.முத்தரசன்