கோலாலம்பூர் – வரும் நவம்பர் 19-ம் தேதி, நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள பெர்சே 2.0 பேரணிக்கு அனுமதி வழங்க முடியாது என காவல்துறை தெரிவித்துள்ளது.
பேரணி நடத்த பெர்சே சார்பில் அளிக்கப்பட்ட விண்ணப்பத்தையும் காவல்துறை நிராகரித்துள்ளது.
இது குறித்து டாங் வாங்கி காவல்துறைத் தலைமை துணை ஆணையர் சைனோல் சாமா கூறுகையில், அமைதிப் பேரணிச் சட்டம் 2012-ன் கீழுள்ள விதிமுறைகளை அவ்விண்ணப்பம் நிவர்த்தி செய்யவில்லை என்பதால், நிராகரிக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.
வரும் நவம்பர் 19-ம் தேதி, டத்தாரான் மெர்டேக்காவில் பெர்சே 5 பேரணியை நடத்த அனுமதி கோரி, பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லா காவல்துறையிடம் விண்ணப்பத்தை அளித்தார்.
“டத்தாரான் மெர்டேக்காவில் பெர்சே 5 பேரணி நடத்த நகர மன்றம் அனுமதி வழங்காத காரணத்தால் எங்களால் அந்த விண்ணப்பத்திற்கு அனுமதி வழங்க இயலவில்லை. அமைதிப் பேரணிச் சட்டத்தின் படி, பேரணி நடத்தும் இடத்தின் உரிமையாளர் மற்றும் காவல்துறையிடம் அனுமதி பெற்றால் மட்டுமே பேரணிக்கு அனுமதி வழங்க முடியும்” என்று சைனோல் தெரிவித்துள்ளதாக ‘தி நியூ ஸ்டெரெயிட்ஸ் டைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.