சான் பிரான்சிஸ்கோ – பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் உட்பட சுமார் 2 மில்லியன் பயனர்கள் இறந்துவிட்டது போல் பேஸ்புக் நேற்று வெள்ளிக்கிழமை தவறுதலாக நினைவுப் பகிர்வைப் பதிவு செய்துவிட்டது.
இந்நிலையில், இதனை ஒப்புக் கொண்டுள்ள பேஸ்புக் நிறுவனம், ‘மிகப் பெரிய தவறு’ என்று அறிவித்துள்ளது.
“இன்று (நேற்று) ஒரு சில நிமிடங்கள், நினைவுப் பகிர்வு மற்ற பயனர்களின் பக்கங்களில் தவறுதலாகப் பதிவு செய்யப்பட்டுவிட்டன” என்று பேஸ்புக் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
“அது ஒரு மிகப் பெரிய தவறு.தற்போது அதனை சரி செய்துவிட்டோம்” என்றும் அவர் கூறினார்.
இந்தத் தவறில் பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க்கின் பேஸ்புக் பக்கமும் சிக்காமல் இல்லை.
‘மார்க் சக்கர்பெர்க்கை நினைவில் கொள்வோம்’ என்ற தலைப்பில், “மார்க்கை நேசிக்கும் மக்கள் அவரை நினைவில் கொண்டு மற்றவர்களுக்கும் பகிர்ந்து அவரது வாழ்வைக் கொண்டாடுவார்கள் என நம்புகின்றோம்” என்ற குறிப்போடு, நினைவாஞ்சலியைப் பதிவு செய்திருக்கிறது பேஸ்புக்.