கோலாலம்பூர் – சிவப்புச் சட்டை அணியினர் உருவாகக் காரணமே பெர்சே தான் என மலேசிய மக்கள் சக்தி கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இது குறித்து மக்கள் சக்தி கட்சியின் தலைவர் டத்தோ ஆர்.எஸ்.தனேந்திரன் கூறுகையில், “உண்மையான நோக்கத்திலிருந்து விலகிய மஞ்சள் சட்டையினருக்குப் பதிலடி கொடுக்கவே சிவப்புச் சட்டை அணி உருவானது. தற்போது அவர்கள் (பெர்சே) கைப்பாவைகளாக உள்ளனர். அவர்களை எதிர்கட்சியினர் சிறை பிடித்து வைத்துள்ளனர்” என்று தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், “பெர்சே 1, 2 மற்றும் 3 போல் பெர்சே 5.0 இல்லை. அவர்கள் பயன்படுத்திக் கொள்ளப்படுகின்றார்கள்” என்று நேற்று புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தனேந்திரன் தெரிவித்தார்.
எனினும், தாங்கள் சிவப்புச் சட்டை அணியினருக்கு ஆதரவு தரவில்லை என்பதையும் தனேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
வரும் சனிக்கிழமை டத்தாரான் மெர்டேக்காவில் பெர்சே 5 பேரணியும், கோலாலம்பூரில் பெர்சேவுக்கு எதிராக சிவப்புச் சட்டைப் பேரணியும் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.