கேமரன் மலை – விரைவில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படும் 14-வது பொதுத் தேர்தலில் கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதி, தேசிய முன்னணி மற்றும் எதிர்க்கட்சி வட்டாரங்களால் அணுக்கமாக கவனிக்கப்படும் தொகுதிகளில் ஒன்றாக மாறியுள்ளது.
2003-ஆம் ஆண்டில்தான் கேமரன்மலைத் தொகுதி முதன் முதலாக உருவாக்கப்பட்டு, தேசிய முன்னணி சார்பில் மஇகாவுக்கு ஒதுக்கப்பட்டது.
அப்போது முதல், அந்தத் தொகுதியில் எதிர்க்கட்சிகளின் சார்பில் ஜசெகதான் போட்டியிட்டு வந்துள்ளது.
2004, 2008 பொதுத் தேர்தல்களில் இரண்டு முறை கேமரன் மலைத் தொகுதியில் மஇகா சார்பாக அங்கு போட்டியிட்டு, தனது சிறப்பான பணிகளால் தொடர்ந்து வென்று வந்தவர் டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி. 2008 பொதுத் தேர்தலைப் புரட்டிப் போட்ட அரசியல் சுனாமிக்கு இடையிலும், கேமரன் மலைத் தொகுதியை அவர் வென்றது ஒரு சாதனையாகவே அப்போது பார்க்கப்பட்டது.
ஆனால், 2013 பொதுத் தேர்தலில் கேமரன் மலைத் தொகுதியை, தேசியத் தலைவர் என்பதால், பழனிவேலுவுக்காக விட்டுக் கொடுக்க வேண்டிய இக்கட்டான நிலைமை தேவமணிக்கு ஏற்பட்டது. டத்தோஸ்ரீ சாமிவேலு ஏற்கனவே 2008 பொதுத் தேர்தலில் தோல்வியடைந்த சுங்கை சிப்புட் தொகுதிக்கு அனுப்பப்பட்டார் தேவமணி. ஆனாலும் அங்கு தோல்வியடைந்தார்.
கேமரன் மலையில் முதன் முதலாகக் களமிறங்கிய மனோகரன்
2013 பொதுத் தேர்தலில் அப்போதைய மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் கேமரன் மலைத் தொகுதியில் போட்டியிட்டார். ஓர் அமைச்சர், மஇகாவின் தேசியத் தலைவர் என்ற முறையில் பலம் வாய்ந்த வேட்பாளராக பழனிவேல் அப்போது பார்க்கப்பட்டார். கூடவே, அவரை எதிர்த்து ஜசெக சார்பில் நிற்கப் போகும் வேட்பாளர் யார் என்ற கேள்வியும் எழுந்தது.
இறுதி நேரம் வரை ஜசெகவில் குழப்பநிலை நீடித்து தேர்தலுக்கு சில நாட்களே இருக்கும்போது, வழக்கறிஞர் எம்.மனோகரன், அக்கட்சியின் கேமரன் மலை வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
2008 முதல் 2013 வரை தெலுக் இந்தான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்திருக்கின்றார் என்ற அனுபவம் தவிர, மற்றபடி எல்லா வகையிலும் மனோகரன் கேமரன் மலைக்கு புதியவர் என்பதால், பலம் வாய்ந்த பழனிவேல் சுலபமாக வென்றுவிடுவார் என்று கணிக்கப்பட்டது.
2013 பொதுத் தேர்தலில் கேமரமன் மலை நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் முடிவுகள்
ஆனால், தேர்தல் பிரச்சாரங்கள் சூடு பிடித்தவுடன் நாளுக்கு நாள் நிலைமை பல்வேறு காரணங்களால் மனோகரனுக்கு சாதகமாக மாறிக் கொண்டே போனது. இறுதியில் தேர்தல் முடிவுகள் வெளியானபோது, 462 வாக்குகள் வித்தியாசத்திலேயே பழனிவேலுவால் வெல்ல முடிந்தது.
அதே சமயம் பெர்ஜாசா என்ற சிறிய கட்சியின் வேட்பாளர், மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் அனைவருக்கும் கிடைத்த மொத்த வாக்குகள் 1321 ஆகும். இதன்படி பார்த்தால், தேசிய முன்னணிக்கு கிடைத்த வாக்குகளை விட, தேசிய முன்னணிக்கு எதிராக விழுந்த வாக்குகள் 859 ஆகும்.
இதனால், நன்கு திட்டமிட்டு செயல்பட்டால், பொருத்தமான வேட்பாளரை நிறுத்தினால் ஜசெக வெல்லக் கூடிய தொகுதிகளுள் ஒன்றாக கேமரன் மலை பார்க்கப்படுகின்றது.
மீண்டும் ஜசெக சார்பில் மனோகரன் போட்டியா?
ஜசெக வேட்பாளராக கேமரன் மலையில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படும் மனோகரன்…
கேமரன் மலை தொகுதியில் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பழனிவேல் மீண்டும் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இருப்பினும், அங்கு அடிக்கடி சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அங்குள்ள வாக்காளர்களுடன் இன்னும் தொடர்புகளை வைத்துக் கொண்டிருக்கின்றார் அவர்.
இருப்பினும், கேமரன் மலை தொகுதியில் அவருடைய கடந்த கால பணிகள் காரணமாக, அவருக்கு மிகப் பெரிய ஆதரவு இருப்பதாகவோ, வாக்கு வங்கி இருப்பதாகவோ கூற முடியாது.
தேசிய முன்னணி-மஇகா சார்பாக யார் அங்கு நிறுத்தப்படுவார் என்ற ஆரூடங்கள் மஇகாவில் நிலவிவருவது ஒரு புறமிருக்க, ஜசெக மீண்டும் கேமரன் மலையில் போட்டியிடத் தயாராகி வருவதாக அந்தக் கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த முறை முதன் முறையாகப் போட்டியிட்டு வெறும் 462 வாக்குகளிலேயே வெற்றி வாய்ப்பை நழுவவிட்ட மனோகரனுக்கு மீண்டும் ஒருமுறை வாய்ப்பு வழங்க ஜசெக தலைமைத்துவம் உத்தேசித்திருப்பதாகவும் அந்தக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த முறை போட்டியிட்டதால் ஏற்பட்ட அனுபவங்களைக் கொண்டு மீண்டும் மனோகரன் நிறுத்தப்பட்டால் கேமரன் மலையில் அவர் தேசிய முன்னணிக்குக் கடுமையான போட்டியை வழங்குவார் என்றும் கேமரன் மலை அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த பொதுத் தேர்தலைத் தொடர்ந்து, ஒரு வேட்பாளர் என்ற முறையில் மனோகரனும் நிறைய தொடர்புகளை கேமரன் மலையில் ஏற்படுத்திக் கொண்டு செயல்பட்டு வருகின்றார் எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக கேமரன் மலை தொகுதியில் கணிசமான எண்ணிக்கையில் இருக்கும் பூர்வ குடி (ஓராங் அஸ்லி) வாக்காளர்களிடையே அணுக்கமானத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு, பின்னணியில் மனோகரன் ஆர்ப்பாட்டமில்லாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார் என்றும் கேமரன் மலையிலுள்ள அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், மஇகா-தேசிய முன்னணி சார்பாக வேட்பாளராகக் களிமிறங்கப் போகிறவர் யார் என்பதைப் பொறுத்துத்தான், அடுத்தடுத்து கேமரன் மலை தொகுதியின் நிலவரங்களும் மாறத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
-இரா.முத்தரசன்