Home Featured நாடு அரசு மருத்துவமனைகளில் இனி சைவ உணவும் கிடைக்கும்!

அரசு மருத்துவமனைகளில் இனி சைவ உணவும் கிடைக்கும்!

1113
0
SHARE
Ad

Asparagus Couscous with Chickpeas and Almonds

கோலாலம்பூர் – அரசாங்க மருத்துவமனைகளில் உள்ள சிற்றுண்டிக் கடைகளில் சாப்பிடும் சைவ உணவுப் பிரியர்கள், இனி எந்த ஒரு தயக்கமும் இன்றி தங்களது உணவைச் சுவைக்கலாம்.

காரணம், சைவ உணவு சாப்பிடுபவர்களையும் கருத்தில் கொண்டு, அக்கடைகளில் முற்றிலும் சைவ உணவையும் வழங்க ஏற்பாடு செய்துள்ளது மலேசிய சுகாதார அமைச்சு.

#TamilSchoolmychoice

இது குறித்து சுகாதாரத்துறை பொது இயக்குநர் டத்தோ டாக்டர் நூர் ஹிசாம் அப்துல்லா கூறுகையில், மருத்துவமனையில் தங்கியிருக்கும் நோயாளிகள் மற்றும் அவர்களைப் பார்வையிட வரும் உறவினர்களில் சைவ உணவு சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

“தற்போது இந்த மாற்றம் அவசியமாகத் தேவைப்படுவதால், அனைத்து மாநிலங்களில் உள்ள இயக்குநர்கள், மருத்துவ மையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் இதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று நினைக்கின்றேன்” என்றும் டாக்டர் நூர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தப் புதிய திட்டத்தின் படி, பச்சை காய்கறிகள் மட்டும் சாப்பிடுபவர்கள், பால் மற்றும் பால் சம்பந்தப்பட்ட பொருட்களை சாப்பிடுபவர்கள், அதோடு முட்டையும் சாப்பிடுபவர்கள் என தரம் பிரிக்கப்பட்டு, அவர்களுக்குத் தகுந்தாற் போல் சிற்றுண்டிக் கடைக்காரர்கள் உணவு வழங்குவார்கள் என்றும் டாக்டர் நூர் தெரிவித்துள்ளார்.

கடைகளில் சைவ உணவிற்கென்று தனியாக ஒரு சிறப்பு இடம் ஒதுக்கப்படும் என்றும், சைவ உணவு சமைப்பதற்கென்று தனியாக பாத்திரங்கள் வைக்கப்படும் என்றும் டாக்டர் நூர் குறிப்பிட்டுள்ளார்.

 சைவ உணவு உண்போர் அமைப்பு  வரவேற்பு

அமைச்சின் இந்தப் புதிய திட்டத்திற்கு மலேசிய சைவ உணவு உண்போர் அமைப்பு (Malaysian Vegetarian Society) வரவேற்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து அதன் தலைவர் திரேசி வோங் கூறுகையில், இதே போன்ற ஒரு திட்டத்தை தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள ஆர் அண்ட் ஆர் கடைகளிலும் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனிடையே, இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்துள்ள மலேசிய சைவ சமூக அமைப்பின் முன்னாள் தலைவர் டாக்டர் பி.வைத்தியலிங்கம், இதே போன்றதொரு திட்டத்தை கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சும், பள்ளிகளில் கொண்டு வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

சைவ உணவு உண்ணும் மாணவர்கள் பலர், பள்ளி சிற்றுண்டிக் கடைகளில் சைவ உணவு கிடைக்காத காரணத்தால் வீட்டிலிருந்து உணவு தயாரித்து எடுத்து வரும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்று ஆசியா பசிபிக் சைவ உணவு உண்போர் யூனியனின் தலைவருமான வைத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் இந்நடவடிக்கையால், இளைஞர்களிடையே காணப்படும் உடல்பருமன் பிரச்சினையையும் பெருமளவு சரி செய்யலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.