Home Featured நாடு கினிடிவி மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

கினிடிவி மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

871
0
SHARE
Ad

kinitv-logo

கோலாலம்பூர் – பிரபல இணைய ஊடகமான மலேசியாகினியின் துணை நிறுவனமான கினிடிவி நிறுவனம், மற்றும் அதன் இரண்டு இயக்குநர்கள் மீது நாளை வெள்ளிக்கிழமை கோலாலம்பூரிலுள்ள சிறப்பு இணையவெளி (சைபர்- Cyber) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படவுள்ளது.

மலேசியாகினி தொடங்கப்பட்டு 17-ஆம் ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாட இன்னும் மூன்று தினங்களே இருக்கும் நிலையில், மலேசியாகினி மீது குற்றவியல் (கிரிமினல்) குற்றச்சாட்டு சுமத்தப்படுகின்றது.

#TamilSchoolmychoice

steven-gan-malaysiakini-editor

குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருக்கும் கினிடிவி இயக்குநரும், மலேசியாகினி ஆசிரியருமான ஸ்டீவன் கான்…

கடந்த ஜூலை 27-ஆம் தேதி கினிடிவி எனப்படும் இணையத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட இரண்டு காணொளிகள் தொடர்பில் கினிடிவி இயக்குநர்கள் ஸ்டீவன் கான், பிரமேஷ் சந்திரன் ஆகிய இருவர் மீதும் இந்தக் குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்படுகின்றன.

இந்த காணொளியில் பத்து கவான் அம்னோ தொகுதியின் முன்னாள் உதவித் தலைவர் கைருடின் அபு ஹாசான் நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பும் அதில், அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் அபாண்டி அலி ராஜினாமா செய்ய வேண்டும் என அவர் விடுத்த அறைகூவலும் ஒளிபரப்பப்பட்டது.

pramesh-chandran-malaysiakini

கினிடிவி இயக்குநரும் மலேசியாகினியின் தலைமைச் செயல் அதிகாரியுமான பிரமேஷ் சந்திரன்….

இதனைத் தொடர்ந்து மலேசியாகினி அலுவலகம் மீது மலேசிய தொடர்பு மற்றும் பல்ஊடக ஆணையம் அதிரடி சோதனை நடத்தி இரண்டு கணினிகளைப் பறிமுதல் செய்தது.

தொடர்பு மற்றும் பல்ஊடக சட்டத்தின் 233 (1) பிரிவின் கீழ் கினிடிவி மீது  குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இணையத் தொடர்புகளைப் பயன்படுத்தி, பொய்யான, ஆபாசமான, பிறரைத் தரக்குறைவாகக் கூறும் தகவல்களை பரப்புவது இந்தப் பிரிவின் கீழ் குற்றமாக்கப்பட்டுள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் 50,000 ரிங்கிட் வரையிலான அபராதமும், 1 வருடம் வரையிலான சிறைத் தண்டனையும் வழங்கப்படும். குற்றம் நிரூபிக்கப்பட்ட பின்னர், குற்றச் சம்பவம் தொடர்ந்து நீடித்தால் நாள் ஒன்றுக்கு ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதிக்கப்படும்.

அதே வேளையில் பிரிவு 244 (1) –இன் கீழ் கினிடிவியின் இயக்குநர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேற்கூறப்பட்ட குற்றத்தைப் புரியும் நிறுவனத்தின் இயக்குநர்கள், உயர் அதிகாரிகள் மீது குற்றம் சாட்ட இந்தப் பிரிவு வகை செய்கின்றது.

இணைய வெளிக் குற்றங்களை விசாரிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நாளை வெள்ளிக்கிழமை இந்தக் குற்றச்சாட்டுகள் மீதான விசாரணைகள் தொடங்குகின்றன.