Home Featured நாடு யுபிஎஸ்ஆர் தேர்ச்சிகளால் தமிழ்ப் பள்ளிகள் மதிப்பு மேலும் உயர்வு!

யுபிஎஸ்ஆர் தேர்ச்சிகளால் தமிழ்ப் பள்ளிகள் மதிப்பு மேலும் உயர்வு!

829
0
SHARE
Ad

tamil-school-students

கோலாலம்பூர் – கடந்த வியாழக்கிழமை நவம்பர் 17-ஆம் தேதி வெளியிடப்பட்ட தமிழ்ப் பள்ளிகளுக்கான யுபிஎஸ்ஆர் தேர்வு முடிவுகள், தமிழ்ப் பள்ளி மாணவர்களின் சிறப்பான திறன்களை மீண்டும் ஒரு முறை வெளிக் கொணர்ந்து காட்டியுள்ளதோடு, தமிழ்ப் பள்ளி மாணவர்களின் வெற்றிக்காக பாடுபடும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், அரசாங்க அமைப்புகள், அரசு சார்பற்ற அமைப்புகள் என அனைத்து தரப்பினரின் பங்களிப்பையும் நமக்கு உணர்த்தியுள்ளன.

காரணம், மாணவர்கள் மட்டுமே, தனித்து இயங்கி மற்றவர்களின் ஒத்துழைப்பு இல்லாமல், தனியாக இந்த சாதனைகளை நிகழ்த்திக் காட்டியிருக்க முடியாது.

#TamilSchoolmychoice

524 தமிழ்ப் பள்ளிகளில் இருந்து 14,674 மாணவர்கள் இந்த வருடம் புபிஎஸ்ஆர் மதிப்பீட்டுச் சோதனைக்கு அமர்ந்தனர் இவர்களில்  161 மாணவர்கள் எல்லா பாடங்களிலும் ‘ஏ’ நிலை தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கடந்த ஆண்டுகளைப் போல் அல்லாமல் இவ்வாண்டு தொடங்கி புபிஎஸ்ஆர் மதிப்பீட்டுச் சோதனைகள் புதிய வடிவத்தைப் பெற்றுள்ளன. இந்த முறை தமிழ்/சீனப் பள்ளி மாணவர்களுக்கு 8 பாடங்கள் இடம் பெற்றிருந்தன.

Kamalanathanதமிழ்ப் பள்ளி மாணவர்களின் வெற்றிக்காக வாழ்த்து தெரிவித்துள்ள கல்வி துணையமைச்சர் கடந்த ஆண்டு யுபிஎஸ்ஆர் மதிப்பீட்டுச் சோதனையை இவ்வாண்டோடு ஒப்பிட வேண்டாமென கேட்டுக் கொண்டுள்ளார். தமிழ்ப் பள்ளிகள், அதன் மாணவர்கள் வளர்ச்சிக்காக பல முனைகளிலும் கடுமையாகப் பாடுபட்டு வருபவர் துணையமைச்சர் கமலநாதன்.

கடந்த ஆண்டைப் போலவே இவ்வாண்டும் தமிழ் மொழி பாடத்தின் ஒட்டு மொத்த தேர்ச்சி நிலை சற்று உயர்ந்துள்ளதாக கமலநாதன் குறிப்பிட்டுள்ளார். அனைத்து மொழிப் பாடங்களையும் ஒப்பிடுகையில் தமிழ் மொழிக்கான தேர்ச்சி விகிதம் இந்த வருடமும் முதல் நிலையை அடைந்துள்ளது குறித்து பெருமையடையவதாகவும் கமலநாதன் தெரிவித்துள்ளார்.

சிம்பாங் லீமா பள்ளியின் சாதனை

இதற்கிடையில் கிள்ளானில் இருக்கும் சிம்பாங் லீமா தமிழ்ப் பள்ளியில் 18 மாணவர்கள் 8-ஏ பெற்று சாதனை புரிந்துள்ளதன் காரணமாக மாநிலத்திலேயே சிறந்த பள்ளியாக அந்தப் பள்ளி தேர்வு பெற்றுள்ளது. மேலும் 13 மாணவர்கள் 7-ஏ, 15 மாணவர்கள் 6-ஏ, 10 மாணவர்கள் 5-ஏ, 24 மாணவர்கள் 4-ஏ என்ற அளவுக்கு இந்தப் பள்ளியிலிருந்து தேர்ச்சி பெற்றுள்ளார்கள். சிலாங்கூர் மாநிலத்திலேயே அதிகமான மாணவர்களைக் கொண்ட பள்ளி சிம்பாங் லீமா பள்ளிதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

upsrசிம்பாங் லீமா தமிழ்ப் பள்ளியின் மாணவனான ஆதிரன் பாலகிருஷ்ணன் மாநிலத்திலேயே சிறந்த மாணவனாகத் தேர்வு பெற்றுள்ளான். கிள்ளான் தாமான் சீ லியோங்கைச் சேர்ந்த பாலகிருஷ்ணன்-ஷீலா குமாரி தம்பதியரின் இரண்டாவது மகனான ஆதிரன் 8 ஏ பெற்றிருப்பதோடு, மாநிலத்திலேயே சிறந்த மாணவராக கல்வி இலாகாவால் தேர்வு பெற்றுள்ளான்.

இருப்பினும் சில மாநிலங்களில் தமிழ்ப் பள்ளிகளுக்கான புபிஎஸ்ஆர் தேர்வு முடிவுகளில் சரிவுகள் ஏற்பட்டுள்ளதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக பேராக் மாநிலத்தில் தேர்வு எழுதிய 2265 தமிழ்ப் பள்ளி மாணவர்களில் 18 பேர் மட்டுமே 8 ஏ பெற்றுள்ளனர். கடந்தாண்டு இம்மாநிலத்திலிருந்து 95 பேர் 7-ஏ பெற்றதாகவும், அதோடு ஒப்பிடும்போது இந்த ஆண்டு பெரும் சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ முருகன் கல்வி நிலைய மாணவர்கள் சிறப்பான தேர்ச்சி

A Prakash Raoபுபிஎஸ்ஆர் தேர்வு முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்த ஸ்ரீமுருகன் கல்வி நிலைய துணை இயக்குநர் பிரகாஷ் ராவ் (படம்) புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தேர்வு முறை மாணவர்களுக்கு மிகவும் சவாலானது என்றும் இருப்பினும் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அனைத்துப் பாடங்களிலும் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக உயர்தர சிந்தனைக் கேள்விகள் நிறைந்த இந்தப் புதிய தேர்வு முறை சவாலானது என்றாலும் ஸ்ரீ முருகன் கல்வி நிலைய மாணவர்கள் சிறந்த  முறையில் தேர்ச்சி அடைந்துள்ளதாகவும் பிரகாஷ் ராவ் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய மாணவர்களுக்கு பல்வேறு தேர்வுகளுக்காக சிறப்பு வகுப்புகளை கடந்த பல ஆண்டுகளாக நடத்தி வரும் அரசு சார்பற்ற அமைப்பு ஸ்ரீ முருகன் கல்வி நிலையமாகும்.

யுபிஎஸ்ஆர் தேர்வு முடிவுகள் சிறப்பாக இருப்பதாக அறிவிப்புகள் வெளிவந்த சூழ்நிலையில் மற்றொன்றையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

எத்தனை மாணவர்கள் தேர்ச்சி பெறுகின்றார்கள், என்பதை வைத்து மட்டுமே நாம் தமிழ்ப்பள்ளிகளின் வெற்றியை நிர்ணயித்து விட முடியாது.

tamil_school_students

தமிழ்ப்பள்ளிகளுக்கு தொடர்ந்து வழங்கப்பட்டு வரும் வசதிகள், மாணவர்களின் எண்ணிக்கையில் சரிவு ஏற்படாமல் பார்த்துக் கொள்வது, சுற்றுச் சூழல், ஆசிரியர்களுக்கான சிறந்த பயிற்சித் திறன், பெற்றொர்களின் அக்கறை, ஈடுபாடு, அரசாங்கம் மற்றும் அரசு சார்பற்ற இயக்கங்களின் பங்களிப்பு என அனைத்து முனைகளிலும் தமிழ்ப் பள்ளிகளுக்கான உதவியும், ஒத்துழைப்பும் தொடர்ந்தால்தான் தமிழ்ப் பள்ளிகள் மேலும் இந்நாட்டில் நிலைத்து நீடித்து வளர்ச்சி பெற முடியும் என்பதோடு, மேலும் அதிகமான மாணவர்களை ஈர்க்க முடியும் என்பதையும் நாம் இந்த நேரத்தில் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்தக் கருத்தையே பிரதிபலிக்கும் வண்ணம்தான் துணையமைச்சர் கமலநாதனும், மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து விடுத்துள்ள அறிக்கையில் “அனைத்து பாடங்களிலும் ஏ பெறும் மாணவர்களை உருவாக்குவது மட்டும் நமது குறிக்கோள் அல்ல. நமது மாணவர்கள் கல்வியில் மட்டுமல்லாது ஒழுக்கத்தில் சிறந்தவர்களாகவும், வருங்காலத்தில் சவால்களை எதிர்கொள்ளக் கூடிய மனப்பக்குவத்தைப் பெற்றவர்களாகவும் திகழ வேண்டும்” எனவும் தெரிவித்துள்ளார்.

-செல்லியல் தொகுப்பு