இந்தியாவின் உத்திரபிரதேச மாநிலத்தின் மதுரா நகர் கிருஷ்ண ஜென்ம பூமி என்றழைக்கப்படுகின்றது.
மதுராவிலிருந்து 11 கிலோமீட்டர் தொலைவில் பிருந்தாவனமும், 22 கிலோமிட்டர் தொலைவில் கோவர்த்தனமும் அமைந்துள்ளன.
இந்நிலையில், ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இயக்கத்தின் (ISCON) ஏற்பாட்டில் சுமார் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில், தற்போதைய ‘அக்ஷய் தாம் பிருந்தாவன்’ பகுதி அருகே 700 அடி உயரத்தில் சந்திரோதயா மந்திர் ஆலயம் அமைப்பதற்கான திட்டப்பணிகளை கடந்த 2014-ம் ஆண்டு ஹோலி பண்டிகையின் போது அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் தொடங்கி வைத்தார்.
இந்த ஆலயத்தையொட்டி அமைந்திருக்கும் 26 ஏக்கர் காலி இடத்தில், புராணக் காலத்து பிருந்தாவனத்துக்கு நிகராக, கிருஷ்ணர் வாழ்ந்த காலத்தை பிரதிபலிக்கும் வகையில் எழில் மிகும் வனப்பகுதி, இசைக்கேற்ப நடனமாடும் அழகிய செயற்கை நீரூற்று, பகவத் கீதை தொடர்பான ஆராய்ச்சி பாடசாலை, யமுனை நதியின் புனித நீரினை தேக்கி வைக்கும் குளங்கள், பசுக்களை பராமரிக்கும் மடமான ‘கோசாலை’ போன்றவை அமைக்கப்படவுள்ளன.
இன்ஜீனியஸ் ஸ்டூடியோஸ் மற்றும் கட்டுமான ஆலோசக நிறுவனமான தோர்ண்டான் தோமாசெட்டி ஆகியவை இணைந்து இந்த ஆலயம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் அமையவிருக்கும் கலாசார மையங்களை வடிவமைத்துள்ளன.
“தற்போது, 180 அடியில் ஆலயத்தின் அடித்தளத்தினை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 511 அணிவரிசைகள் கட்டப்படும்” என்று ஆலயக் கட்டுமானத் திட்டத்தின் இயக்குநர் நரசிம்ம தாஸ் தெரிவித்துள்ளார்.