கோலாலம்பூர் – பருவ வயதில் இருந்து தனக்கு வரப் போகும் கணவன் இப்படி தான் இருக்க வேண்டும் என்று பல கற்பனைகள் செய்து வைத்திருக்கும் பணக்காரப் பெண்ணான திவ்யா (காஜல் அகர்வால்), தான் எதிர்பார்த்தவைகளுக்கு நேர் எதிரான குணம் கொண்ட கல்லூரித் தோழனான அரவிந்த் (ஜீவா) மீது காதல் கொள்கிறார்.
எப்படி இந்த காதல் உண்டானது? என்று யோசிப்பதற்குள் திருமணமும் முடிந்துவிடுகிறது. திருமணத்திற்குப் பிறகு இரண்டு நாள் கூட சேர்ந்து வாழ முடியாத அளவிற்கு அவர்களுக்குள் பிரச்சினை முற்றி இருவரும் பிரிந்துவிடுகின்றனர்.
ஜீவாவை விவாகரத்து செய்து விட்டு, தனது வீட்டில் பார்த்த பணக்காரப் பையனான பாபி சிம்ஹாவைத் திருமணம் செய்ய நினைக்கும் காஜல், ஜீவாவிடம் வந்து விவாகரத்துப் பத்திரத்தில் கையெழுத்து போட வேண்டும் என்று கேட்கிறார்.
ஜீவா கையெழுத்து போட்டாரா? இல்லையா? – என்பதை கிளைமாக்ஸ் வரை காத்திருக்க வைத்து ரசிகர்களிடம் ‘கவலை வேண்டாம்’ என்று சொல்லி வீட்டுக்கு அனுப்பி வைத்திருக்கிறார் இயக்குநர் டிகே.
ரசிக்க
படத்தில் நம்மை மிகவும் ரசிக்க வைப்பது ஒளிப்பதிவும், கதை நடக்கும் சூழலும் தான். குளு குளு மலைப்பிரதேசத்தில் பங்களா வீட்டில் வைத்து படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்கள். பச்சை நிற மரங்கள், பனி கொட்டும் இரவுகள் என ரம்யமான காட்சிகளால் அசர வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் அபிநந்தன்.
காஜல் அகர்வால்.. இப்படத்தை மேலும் வண்ணமயமாக்குவதில் முக்கியப் பங்கு வகித்திருக்கிறார். முதல் பாதி முழுக்க கிளுகிளுப்பும், கலகலப்புமாக படம் நகர உதவியிருக்கிறார். ஆனால் இரண்டாம் பாதியில் அதற்கு நேர் எதிர். சிகை அலங்காரம் கூட அவருக்குப் பொருந்தவில்லை. இரண்டாம் பாதியில், ‘கவலை வேண்டாம் கவர்ச்சியை நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்று அந்தப் பொறுப்பை ஸ்ருதி இராமகிருஷ்ணன் ஏற்றிருக்கிறார். அதோடு, சுனைனாவும் தோழி கதாப்பாத்திரம் ஒன்றில் வந்து போகிறார். எதற்கு அப்படி ஒரு கதாப்பாத்திரம் இருக்கிறது? என்பது இயக்குநருக்குத் தான் தெரியும்.
ஜீவா .. வழக்கம் போல், அவருக்குக் கைவந்த கதாப்பாத்திரமான ‘எதற்கும் கவலைப் படாத’ குணம் கொண்டவராகவே நடித்திருக்கிறார். நண்பர்களுடன் ஊர் சுற்றுவது, மது அருந்துவது என பல படங்களின் சாயல் உள்ளது. ‘ரிஸ்க் பாஸ்கர்’ சாயல் இந்த ‘அரவிந்த் பாஸ்கர்’ கதாப்பாத்திரத்திலும் தெரிகிறது. என்றாலும் ரசிக்க வைக்கத் தவறவில்லை.
காமெடி.. படம் முழுவதும் காமெடி இருக்கின்றது. ஆர்.ஜே.பாலாஜி, பால சரவணன், மயில்சாமி, மனோபாலா ஆகியோர் வரும் காட்சிகள் எல்லாம் காமெடிக்காகவே வைக்கப்பட்டிருக்கின்றது. என்றாலும் அவையெல்லாம் நாம் பார்த்துப் பழகிவிட்ட கான்செப்ட் என்பதால், ஒரு சில இடங்களில் மட்டுமே மெய் மறந்து சிரிக்க முடிகின்றது. இன்னொரு தகவல் என்னவென்றால், அந்த காமெடி எல்லாமே இரட்டை அர்த்த வசனங்களைக் கொண்டது. அதனால் கொஞ்சம் நெளியவும் வைக்கின்றது.
சொதப்பல்
எந்த ஒரு சுவாரசியத்தையும், திருப்பத்தையும் கொடுக்காத ஒரே நேர்கோட்டில் செல்லும் திரைக்கதை அமைப்பு. விவாகரத்து வேண்டும் என்று ஜீவா வீட்டில் வந்து தங்குகிறார் காஜல்.. சரி.. ஆனால் அவரைத் திருமணம் செய்யப் போகும் பாபி சிம்ஹாவும், தோழி ஸ்ருதியும் எதற்காக அங்கு தங்க வேண்டும்? என்ற ரசிகனின் அடிப்படை கேள்விக்குக் கூட பதில் சொல்லவில்லை திரைக்கதை.
காஜல் வீட்டில் ஜீவாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் சரி.. அதிலும் வலு இல்லை.. பாபி சிம்ஹா என்னமோ சொல்ல வருகிறார் அதிலும் தெளிவில்லை. சுனைனாவுக்கும் – ஜீவாவிற்குமான புரிதலிலும் சுவாரசியம் இல்லை. இப்படியாக எந்தெந்த காட்சிகள் எல்லாம் ரசிகனை விழிக்க வைக்குமோ அதெல்லாம் பனிக்கு இழுத்துப் போர்த்திக் கொண்டு குளிர் காய்வதால், படத்தில் பல இடங்களில் ரசிகன் உறங்கிவிடும் வாய்ப்பு உள்ளது.
பின்னணி இசை.. கைகொடுக்கவில்லை.. பாடல்களில் ‘நீ தொலைந்தாயோ’ பாடலில் மட்டும் கவனம் ஈர்க்க வைத்திருக்கிறார் லியோ ஜேம்ஸ்.
மொத்தத்தில், ‘கவலை வேண்டாம்’ – கிளுகிளுப்பு, காமெடி கலகலப்பு .. இவை மட்டுமே.. வித்தியாசமான கதை, சுவாரசியமான திரைக்கதை, மனதில் நிற்கும் காதல் இவையெல்லாம் எதிர்பார்த்துச் சென்றால் ஏமாற்றமே!
-ஃபீனிக்ஸ்தாசன்