கோலாலம்பூர் – மலேசியாவின் புதிய மாமன்னராக அடுத்த 5 ஆண்டுகளுக்கு பதவி வகிக்கப் போகும் கிளந்தான் மாநில சுல்தான் முகமட் (படம்) இன்று செவ்வாய்க்கிழமை 15-வது மாமன்னராக அதிகாரபூர்வமாக அரியணை அமர்கின்றார்.
கடந்த 5 ஆண்டுகளாக நாட்டின் 14-வது மாமன்னராக அரியணையில் இருந்து வந்த கெடா சுல்தான் துவாங்கு ஹாலிம் முவாட்சாம் ஷா விடைபெற்று, தனது துணைவியாரோடு நேற்று தனது மாநிலத் தலைநகர் அலோர்ஸ்டார் சென்றடைந்தார்.
மாமன்னராகப் பதவி விலகிச் செல்லும் கெடா சுல்தானுக்கு வழங்கப்பட்ட வழியனுப்பு வைபவத்தில் பிரதமர் நஜிப், துணைப் பிரதமர் சாஹிட் ஹாமிடி (படம்: நன்றி – நஜிப் துன் ரசாக் டுவிட்டர்)
கோலாலம்பூரில் அவருக்கான வழியனுப்பு விழா சிறப்பாக நடந்த வேளையில், அலோர்ஸ்டாரில் அவரை அதிகாரபூர்வமாக மீண்டும் சுல்தானாக வரவேற்க, பிரமுகர்கள் உள்ளிட்ட சுமார் 15 ஆயிரம் பேர் வருகை தந்தனர்.
நேற்று காலை சிறப்பு விமானத்தில் மூன்று இராணுவ விமானங்கள் பின்தொடர காலை 11.00 மணியளவில் கோலாலம்பூரில் இருந்து புறப்பட்ட கெடா சுல்தான் காலை 11.45 மணியளவில் அலோர்ஸ்டார் சென்றடைந்தார்.
இதற்கிடையில், புதிய மாமன்னராக இன்று செவ்வாய்க்கிழமை பாரம்பரியமிக்க சடங்குகளோடு கிளந்தான் சுல்தான் அரியணையில் அமர்கின்றார்.
மலேசியாவின் புதுமையான அரசியல் சாசன சட்டங்களின்படி, 9 மாநிலங்களின் சுல்தான்கள் தங்களுக்கிடையில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை சுழல் முறையில் ஒரு புதிய மாமன்னரைத் தேர்ந்தெடுப்பர். 5 ஆண்டுகள் அரியணையில் இருந்த பின்னர் அந்த சுல்தான் தனது மாநிலத்திற்குத் திரும்பி தனது பணிகளைத் தொடர்வார்.
தற்போது கெடா சுல்தான் இரண்டு முறை, முழு 5 ஆண்டுகள் தவணைக்கு மாமன்னராக அரியணையில் இருந்த பெருமையையும், வரலாற்றையும் உருவாக்கி விட்டுச் செல்கின்றார்.
1970 முதல் 1975 வரை நாட்டின் 5-வது மாமன்னராக அரியணையில் அமர்ந்த கெடா சுல்தான் துவாங்கு அப்துல் ஹாலிம் பின்னர் சுழல் முறையில் நாட்டின் 14-வது மாமன்னராக 13 டிசம்பர் 2011-ஆம் நாள் அரியணை அமர்ந்தார்.
கெடா சுல்தானுடன் பிரதமர் நஜிப்…(படம்: நன்றி – நஜிப் துன் ரசாக் டுவிட்டர்)