Home Featured நாடு 90 நிமிடங்களுக்குள் சிங்கப்பூர் பயணம் – துரித இரயில் ஒப்பந்தம் கையெழுத்தானது!

90 நிமிடங்களுக்குள் சிங்கப்பூர் பயணம் – துரித இரயில் ஒப்பந்தம் கையெழுத்தானது!

846
0
SHARE
Ad

najib-lee-hsien-loong-singpare-kl-hsr-signing

கோலாலம்பூர் – பெரும் எதிர்பார்ப்புகளை எழுப்பி விட்டிருக்கும் சிங்கப்பூருக்கும், கோலாலம்பூருக்கும் இடையிலான துரித இரயில் திட்டம் இரு நாடுகளுக்கும் இடையில் நேற்று செவ்வாய்க்கிழமை கையெழுத்தானது.

இந்தத் திட்டம் முழுமையடையும்போது, சிங்கப்பூருக்கும், கோலாலம்பூருக்கும் இடையிலான பயண நேரம் 90 நிமிடங்களாகக் குறையும். துரித இரயில்கள் மணிக்கு 300 கிலோ மீட்டர் வேகத்தில் பயணத்தை மேற்கொள்ளும்.

#TamilSchoolmychoice

சிங்கப்பூர்-மலேசிய பிரதமர்களின் 7-வது சந்திப்பு நேற்று புத்ரா ஜெயாவில் நடைபெற்றபோது, அவர்களின் முன்னிலையில் இந்த வரலாற்று பூர்வ உடன்படிக்கை கையெழுத்தானது.

இந்தத் திட்டத்தின் மூலமாக, இருநாடுகளுக்கும் இடையிலான விமானப் பயண சேவைகளும் காலப் போக்கில் குறைந்து விடும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

நேற்று மாலை 5.15 மணியளவில் இந்த உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது. மலேசியாவின் சார்பில் பிரதமர் துறை அமைச்சர் டத்தோ அப்துல் ரஹ்மான் டஹ்லான் கையெழுத்திட, சிங்கையின் சார்பில் போக்குவரத்து அமைச்சர் காவ் பூன் வான் கையெழுத்திட்டார். மலேசியப் போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ லியோவ் தியோங் லாய் உடனிருந்தார்.

zahid-hamidi-liow-thiong-lai-hsr-signing

போக்குவரத்து அமைச்சர் லியோவ் தியோங் லாய், துணைப் பிரதமர் அகமட் சாஹிட் ஹாமிடி, சிங்கை பிரதமர் லீ சியன் லூங் துணைவியார் ஹோ சிங் ஆகியோர், உடன்படிக்கை கையெழுத்தான பின்னர் வழங்கப்பட்ட விருந்துபசரிப்பில் பரிமாறப்பட்ட டுரியான் பழங்களை ருசிக்கக் காத்திருக்கின்றனர்.

உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டதை பிரதமர் நஜிப் துன் ரசாக்கும், சிங்கை பிரதமர் லீ சியன் லூங்கும் பார்வையிட்டனர். மலேசியத் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ சாஹிட் ஹாமிடியும் உடனிருந்தார்.

கடந்த ஜூலை 19-ஆம் தேதி இந்த துரித இரயில் திட்டம் தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த துரித இரயில் பயண சேவை எதிர்வரும் 2026-ஆம் ஆண்டில் முழுமையாகப் பயன்பாட்டுக்கு வரும்.

lee-hsien-loong-hsr-signing

உடன்படிக்கை கையெழுத்தான பின்னர் வழங்கப்பட்ட விருந்துபசரிப்பில் பரிமாறப்பட்ட  மலேசிய டுரியான் பழத்துடன் சிங்கை பிரதமர் லீ சியன் லுங் – அருகில் நஜிப் துணைவியார் ரோஸ்மா மன்சோர்….

350 கிலோ மீட்டர் நீளமுள்ள இரயில் பாதையைக் கொண்ட இந்தத் திட்டத்தில் 335 கிலோ மீட்டர் இரயில் பாதை மலேசியாவுக்குள் இருக்கும் என்பதோடு கோலாலம்பூரின் பண்டார் மலேசியா பகுதியில் இருந்து இந்த இரயில் பாதை தொடங்கும். எஞ்சிய 15 கிலோ மீட்டர், சிங்கப்பூருக்குள் நிர்மாணிக்கப்பட்டு, ஜூரோங் கிழக்கு (ஈஸ்ட்) என்ற இடத்தில் முடிவுறும்.

கோலாலம்பூரில் இருந்து புறப்படும் இரயில் சேவையின் வழியில் புத்ரா ஜெயா, சிரம்பான், ஆயர் குரோ, மூவார், பத்து பகாட், இஸ்கண்டார் புத்திரி ஆகிய ஆறு பயண முகப்பிடங்கள் (ஸ்டேஷன்) அமையும்.

இந்தத் திட்டத்தை மலேசிய நிதியமைச்சின் கீழ் அமைக்கப்பட்டுள்ள மைஎச்எஸ்ஆர் கோர்ப் சென்டிரியான் பெர்ஹாட்  (MyHSR Corp Sdn Bhd) என்ற நிறுவனம் நிர்வகிக்கும்.

(படங்கள்: நன்றி – நஜிப் துன் ரசாக் டுவிட்டர் தளம்)