மலாக்கா – உப்பே தீவில் உள்ள குகை ஒன்றில் ராட்சத எலும்புகூடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சராசரி மனிதனின் உருவத்தை விட அந்த உருவம் மிகப் பெரியது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வரலாற்றுப் பூர்வத் தளங்களை ஆய்வு செய்ய மலாக்கா மாநில அரசு நியமனம் செய்த முகமட் ஃபாத் குசாரி எம்.சையத் என்பவர், பூமிக்கு வெளியே காணப்பட்ட சில எலும்புத்துண்டுகளை வைத்து, அங்கு இருந்த மிகப் பெரிய உருவம் புதைக்கப்பட்ட கல்லறையைக் கண்டதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் அக்குகைக்கு வெளியே 1.2 கிலோமீட்டர் தொலைவில் மேலும் இரு பெரிய கல்லறைகளைக் கண்டறிந்துள்ளார்.
இது குறித்து அரசாங்கத்திற்குத் தகவல் தெரிவித்துள்ள முகமட் ஃபாத், முறையான அனுமதி இன்றி அதனை யாரும் தோண்டி எடுக்க இயலாது என்று தெரிவித்துள்ளார்.
அகழ்வாராய்ச்சியில் 10 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த அவர், தான் கண்டறிந்த பெரிய அளவிலான எலும்புகளை வைத்து, அந்த உருவத்தின் தலை கிட்டத்தட்ட 3 மீட்டரில் இருந்து 5 மீட்டர் வரை இருக்கலாம் என்று கணித்துள்ளார்.