பட்டர்வொர்த் – நேற்று புதன்கிழமை மாலை பட்டவொர்த் விமானப்படைத் தளத்தின் அருகே பீச்கிராப்ட் பி200டி இரக விமானம் விழுந்து நொறுங்கியதில் விமானி பலியானார். விமானத்தில் பயணம் செய்த மூவர் காயமடைந்தனர்.
எதிர்பாராத இந்த விபத்தில் பலியான விமானி மேஜர் காயாம்பூ செல்லம் (வயது 44) குடும்பத்திற்கு மூத்த மகன் என்பதோடு, ஒரே மகனும் கூட.
நேற்று மாலை செபராங் ஜெயா மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டிருந்த மேஜர் காயாம்புவின், உடலைப் பெற அவரது உறவினர்கள் மருத்துவமனைக்கு வந்தனர். இதனால் அவ்விடமே மிகவும் சோகமாகக் காட்சியளித்தது.
அலோர் ஸ்டார் விமானப்படைக் கல்லூரியில், பேராசிரியராகப் பணியாற்றி வரும் காயாம்பு, குடும்பத்தில் அனைவரிடமும் மிகவும் அன்போடு நடந்து கொள்வார் என்று அவரது சகோதரி காயத்ரி கண்ணீரோடு தெரிவித்தார்.
அதோடு, நேற்று காயாம்புவின் பிறந்தநாள் என்பதால், ஒட்டுமொத்த குடும்பமும் அவர் வீட்டிற்கு வருவதை எதிர்பார்த்துக் காத்திருந்தது.
காயாம்பு வீட்டிற்கு வந்தவுடன் பிறந்தநாள் கொண்டாடத் தயாராக இருந்தோம் என்றும் காயத்ரி கூறினார்.
“அவர் வீடு திரும்பியிருக்க வேண்டும் ஆனால் இன்னொரு விமானிக்குப் பதிலாக அவ்விடத்தை நிரப்பினார். அவர் என்னுடைய ஒரே மகன். ஏதோ ஒன்று நடக்கப் போகிறது என்று உணர்ந்தோம்” என்று மறைந்த காயாம்புவின் தந்தை எம்.செல்லம் (வயது 72) செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
காயாம்புவின் தாய் இந்திரா தேவியும் (வயது 65), காயாம்புவின் மனைவி எஸ்.உஷாவும் (வயது 42) அதிர்ச்சியில் பேசும் நிலையில் இல்லை. அவர்களை நண்பர்களும், உறவினர்களும் தேற்றி வருகின்றனர்.
காயாம்புவிற்கு 2 வயதிலிருந்து 13 வரை 4 பிள்ளைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. எல்லோரையும் நேசிக்கும் குணமுடைய காயாம்புவின் திடீர் மறைவு அப்பகுதி மக்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இன்று வியாழக்கிழமை, 28, பெர்சியாரான் புக்கிட் கெச்சில் 6, தாமான் ஸ்ரீ நிபோங்கில் காயாம்புவின் இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, இவ்விபத்து நடந்ததற்கான காரணம் குறித்து அறிய மலேசிய விமானப்படை சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்துள்ளது.
பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மறைந்த விமானியின் குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.