கோலாலம்பூர் – 2015-ம் ஆண்டில் வெளிவந்த மலேசியத் திரைப்படங்களுக்கு சிறந்த ஒரு அங்கீகாரம் வழங்கும் நோக்கில், ‘மலேசிய இந்திய சினிமா விருது 2016’ என்ற மிகப் பிரம்மாண்டமான விருது விழா வெள்ளிக்கிழமை இரவு ஷா ஆலம் ஐஆர்டிகேஎல் மாலில், உள்ள டிஎஸ்ஆர் மாநாட்டு அரங்கில் நடைபெற்றது.
இவ்விழாவில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த மலேசியக் கலைஞர்கள் பங்கேற்றனர். ஆடல் பாடலுடன் அனைத்துலகத் தரத்தில் நடைபெற்ற இந்த விருது விழாவில், 2016-ம் ஆண்டிற்கான சிறந்த திரைப்படமாக எஸ்.டி.புவனேந்திரன் இயக்கிய ‘மறவன்’ தேர்ந்தெடுக்கப்பட்டது.
பொதுமக்களின் வாக்குகளின் அடிப்படையில் சிறந்த திரைப்படமாக ‘மறவன்’ தேர்வாகியுள்ளது.
ஏற்கனவே, நியூயார்க் / தாக்காவில் நடைபெற்ற அனைத்துலக திறந்தவெளி திரைப்பட விழா 2016-ல், ‘மறவன்’, ‘COUNTRY BEST AWARD’ என்ற அனைத்துலக விருதையும், மெல்பர்ன் ஃபீனிக்ஸ் பிலிம் பெஸ்டிவலில், அரையிறுதி வரைக்கும் தேர்வாகி மலேசியாவிற்குப் பெருமை சேர்த்துள்ளது.
பார்சிலோனா, ரஷியா, சிங்கப்பூர் மற்றும் ஹாலந்து ஆகிய நாடுகளில் நடைபெற்ற திரைப்பட விழாக்களிலும் மறவன் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
‘மறவன்’ இயக்குநர் எஸ்.டி.புவனேந்திரனுக்கும், படக்குழுவினருக்கும் செல்லியலின் வாழ்த்துகள்!