மாஸ்கோ – இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 91 பேர்களுடன் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட ரஷிய இராணுவ விமானம் ஒன்று பிளேக் சீ (Black Sea) எனப்படும் கருங்கடல் பகுதியில் விழுந்து நொறுங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ரஷிய தற்காப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
அந்த “டப்போலெவ் டியு-54” (Tupolev Tu-154) ரக விமானத்தில் 83 பயணிகளும், 8 பணியாளர்களும் இருந்தனர்.
பிளேக் சீ எனப்படும் கருங்கடல் பகுதி அமைந்திருக்கும் பகுதியைக் காட்டும் வரைபடம்…
கருங்கடல் பகுதியிலுள்ள அட்லர் நகர் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட அந்த விமானம் சிரியாவிலுள்ள ரஷிய இராணுவ விமானத் தளம் நோக்கிச் செல்லும் வழியில் ராடார் கருவியிலிருந்து மறைந்தது.
சோச்சி என்ற நகரிலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் நொறுங்கிய அந்த விமானத்தின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டதாக ரஷிய தற்காப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
விமானம் விழுந்து நொறுங்கிய நேரத்தில் அது பறந்து கொண்டிருந்த பகுதியில் மோசமான வானிலை எதுவும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.