புதுடெல்லி – இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியில் கடந்த ஏப்ரல் மாதம் நட்சத்திர விடுதி ஒன்றில் அறை எடுத்துத் தங்கியிருந்த அமெரிக்கப் பெண் ஒருவர், கும்பல் ஒன்றால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப் பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டெல்லியில் கன்னட் பகுதியில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில், கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்காவைச் சேர்ந்த 25 வயதுப் பெண் ஒருவர் அறை எடுத்துத் தங்கியிருந்தார்.
தனியாக வந்திருந்த அவரை கும்பல் ஒன்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதோடு, அதனைக் காணொளியாகப் பதிவு செய்து, இணையத்தில் வெளியிட்டுவிடுவோம் என்று மிரட்டியுள்ளது. பின்னர் அதைக் காட்டியே இரண்டு நாட்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தான் பாலியல் வல்லுறவுக்கு ஆளானது குறித்து டெல்லி காவல்துறையில் புகார் அளித்துவிட்டு அமெரிக்கா சென்று விட்ட அவர், அங்கிருந்தபடி தொடர்ந்து டெல்லி காவல்துறையினரைத் தொடர்பு கொண்டு விசாரித்து வந்தார்.
ஆனால் பல மாதங்களாக டெல்லி காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் போகவே, விரக்தி அடைந்த அப்பெண், அமெரிக்காவிலுள்ள அரசு சாரா இயக்கம் ஒன்றின் மூலமாக இந்திய அரசாங்கத்திற்கு நெருக்குதல் கொடுத்தார். அதோடு, நேரடியாக டெல்லி வந்து தனக்கு நேர்ந்த துயரம் குறித்து நீதிபதி முன்னிலையில் புகார் எழுதிக் கொடுத்தார்.
அதனைத் தொடர்ந்து, டெல்லி காவல்துறை வேகமாக செயல்பட்டு சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்து, அப்பெண் முன்னிலையில் அடையாள அணிவகுப்பு நடத்தியது.
அப்பெண் அவர்களில் 4 பேரை அடையாளம் காட்டியதைத் தொடர்ந்து, அவர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.