கோலாலம்பூர் – ஒரே மலேசியா உதவித் தொகை (BR1M) என்பது ஒருவகையில் லஞ்சம் தான் என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மொகமட் கூறியிருக்கும் கருத்தை எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் ஏற்க மறுத்துள்ளார்.
ஒரே மலேசியா உதவித் தொகை என்பது லஞ்சம் அல்ல என்று வான் அசிசா தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு உதவித் தொகை வழங்குவது அரசாங்கத்தின் கடைமைகளில் ஒன்று என்றும் பிகேஆர் தலைவருமான வான் அசிசா தெரிவித்துள்ளார்.
“அரசாங்கத்திடமிருந்து இந்த உதவித் தொகையைப் பெறும் உரிமை அவர்களுக்கு (மக்கள்) உண்டு. அது கட்டாயம் கொடுக்கப்பட வேண்டும்” என்று இன்று செவ்வாய்க்கிழமை பிகேஆர் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் வான் அசிசா தெரிவித்துள்ளார்.