Home Featured நாடு பெல்டா தலைவராக ஷாரிர் சாமாட் நியமனம்

பெல்டா தலைவராக ஷாரிர் சாமாட் நியமனம்

738
0
SHARE
Ad

shahrir-abdul-samad

கோலாலம்பூர் – அரசாங்கத்தின் விவசாயத் திட்ட அமைப்பான பெல்டாவுக்கு ஜோகூர் பாரு நாடாளுமன்ற உறுப்பினர் டான்ஸ்ரீ ஷாரிர் சாமாட் நியமிக்கப்பட்டுள்ளார்.

அம்னோவின் நீண்ட நாளைய உறுப்பினரான ஷாரிர் முன்னாள் கூட்டரசுப் பிரதேச அமைச்சராகவும் பணியாற்றியவர்.

#TamilSchoolmychoice

தற்போது நாடாளுமன்றத்தில் அமைச்சரவையில் இல்லாத தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் குழுவுக்கு (Barisan Nasional Backbenchers Club) தலைவராக ஷாரிர் பணியாற்றி வருகின்றார்.

டான்ஸ்ரீ முகமட் இசா அப்துல் சமாட்டுக்குப் பதிலாக ஷாரிர் பெல்டா தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இருப்பினும், முகமட் இசா பெல்டாவின் பங்குச் சந்தை நிறுவனமான பெல்டா குளோபல் வெஞ்சர்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் நிறுவனத்தின் தலைவராகத் தொடர்ந்து நீடிப்பார். 2011 முதல் முகமட் இசா பெல்டா தலைவராகப் பணியாற்றி வந்துள்ளார்.

நீண்ட காலமாக ஜோகூர் பாரு நாடாளுமன்றத் தொகுதியின் அசைக்க முடியாத உறுப்பினராகத் தொடர்ந்து இருந்து வருபவர் ஷாரிர். இவர் ஷா ஆலாம் நாடாளுமன்ற உறுப்பினர் காலிட் சாமாட்டின் மூத்த சகோதரர் ஆவார். முன்பு பாஸ் கட்சியில் இருந்த காலிட் சாமாட் தற்போது அமானா கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவராகத் திகழ்கின்றார்.

பெல்டாவின் தே.மு. ஆதரவை நிலைப்படுத்தும் நியமனமா?

மேடைப் பேச்சுகளில் சிறந்தவராகவும், மிகச் சிறந்த பிரச்சார பீரங்கியாகவும் கருதப்படும் ஷாரிர் பெல்டா தோட்டங்களில் தேசிய முன்னணி சந்தித்து வரும் எதிர்ப்புகளைச் சமாளிக்கும் விதத்திலும், அங்கு சரிந்து வரும் தேசிய முன்னணியின் ஆதரவை நிலைப்படுத்தும் முயற்சிகளிலும் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பெல்டா அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஷாரிர் மீண்டும் ஜோகூர்பாரு தொகுதியில் போட்டியிட மாட்டார் என்றும் கருதப்படுகின்றது.

ஷாரிரை பெல்டா தலைவராக நியமித்துள்ள பிரதமர் நஜிப் துன் ரசாக், ஷாரிரின் பரந்த அரசாங்க மற்றும் அமைச்சு அனுபவங்கள் மூலம் அவரால் பெல்டாவின் வளர்ச்சிக்கு பெரிதும் பாடுபட முடியும் என நம்பிக்கை தெரிவித்தார்.

மிக இளம் வயதிலேயே துன் மூசா ஹீத்தாமின் அரசியல் செயலாளராகத் தனது அரசியல் பயணத்தைத் தொடக்கிய ஷாரிர் பின்னர் பிரதமராக இருந்த துன் அப்துல் ரசாக்கின் அரசியல் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

1978-ஆம் ஆண்டில் முதன் முதலாக ஜோகூர் பாரு நாடாளுமன்றத்திற்குப் போட்டியிட்டு வெற்றி பெற்றார் ஷாரிர். அதன்பின்னர் தொடர்ந்து ஒவ்வொரு பொதுத் தேர்தலிலும் அந்தத் தொகுதியைத் தற்காத்து வந்துள்ளார்.

ஒருமுறை மகாதீர் பிரதமராக இருந்த காலகட்டத்தில் அவரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளின் காரணமாக, 1988-இல் ஜோகூர் பாரு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மீண்டும் அதே தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டு, தேசிய முன்னணி-அம்னோ வேட்பாளரைத் தோற்கடித்து, தனது ஆதரவு பலத்தை நிரூபித்தார்.

இதைத் தொடர்ந்துதான், நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்தால் மீண்டும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினராகப் போட்டியிட முடியாது என்ற சட்டத்தைக் கொண்டு வந்தார் மகாதீர்.