கோலாலம்பூர் – தொடங்கியுள்ள 2017-ஆம் ஆண்டில் ஏறத்தாழ 13,370 மாணவர்கள் தமிழ்ப் பள்ளிகளில் முதலாம் வகுப்பில் பதிந்து கொண்டுள்ளதாக தகவல் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தமிழ்ப் பள்ளிகளுக்கு மாணவர்களை அனுப்புவதில் இந்தியப் பெற்றோர்கள் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகின்றார்கள் என்பதையே இது காட்டுகிறது. “தமிழ்ப் பள்ளியே நமது தேர்வு” என்பது போன்ற பிரச்சாரங்களையும் பல்வேறு தரப்புகள் பல இடங்களில் முடுக்கி விட்டுள்ளன. இதுவும் தமிழ்ப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை நிலைநிறுத்தப்பட்டு வருவதற்கான முக்கியக் காரணமாகும்.
இவையெல்லாம் மகிழ்ச்சி தரும் நிலைமைதான் என்றாலும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், தமிழ்ப் பள்ளிகளின் மாணவர் எண்ணிக்கை குறைந்துள்ளது என்பதையும் நாம் புறந்தள்ளி விட முடியாது.
இந்நிலையில், நாட்டில் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களைக் கொண்ட பள்ளிகளை மறு சீரமைப்பு செய்யும் முயற்சிகள் இந்த ஆண்டு முதல் தீவிரமாகத் தொடங்கப்படும் என கல்வி துணை அமைச்சர் டத்தோ ப.கமலநாதன் (படம்) கூறியுள்ளார்.
குறைந்த மாணவர் எண்ணிக்கை பள்ளிகள் எவை?
150-க்கும் குறைந்த மாணவர் எண்ணிக்கை கொண்ட பள்ளிகள் குறைந்த மாணவர்கள் கொண்ட பள்ளிகளாகத் தரம் பிரிக்கப்பட்டுள்ளன. கல்வியை வழங்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் கடமை, அதே வேளையில் அதற்காக ஏற்படும் செலவினங்கள் ஆகியவற்றை அடையாளக் கண்டு சமன்படுத்தும் முயற்சியாக பள்ளிகள் இவ்வாறு தரம் பிரிக்கப்பட்டுள்ளன.
“தற்போது நாட்டில் இவ்வாறு குறைந்த மாணவர் எண்ணிக்கை கொண்ட பள்ளிகளின் எண்ணிக்கை 2,067 -ஆக இருக்கின்றது. இதில் 1,316 பள்ளிகள் தேசியப் பள்ளிகளாகும். சீனப் பள்ளிகளின் எண்ணிக்கை 454 ஆகும். தமிழ்ப் பள்ளிகளின் எண்ணிக்கை 297” என்றும் கமலநாதன் மேலும் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் நாட்டிலுள்ள மொத்தம் 526 தமிழ்ப் பள்ளிகளில் பாதிக்கும் மேற்பட்டவை குறைந்த மாணவர்களைக் கொண்ட பள்ளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
பெரும்பாலும் தோட்டப் புறங்களிலும், கிராமப் புறங்களிலும் அமைந்துள்ள இந்த குறைந்த மாணவர் எண்ணிக்கை கொண்ட பள்ளிகளை இடம் மாற்றி நிர்மாணிப்பதாலும், மற்ற பள்ளிகளுடன் இணைப்பதாலும், செலவினங்கள் மேலும் குறையும் என்பதால் மேலும் சிறந்த கல்விச் சேவையை அரசாங்கம் வழங்க முடியும் என்றும் கமலநாதன் கூறியுள்ளார்.
பள்ளிகளை இடம் மாற்றி அமைப்பது சாத்தியமில்லாத பட்சத்தில் மற்ற பள்ளிகளின் வகுப்பறைகளோடு குறைந்த மாணவர் எண்ணிக்கை கொண்ட பள்ளிகளின் வகுப்புகளை ஒன்றிணைக்க முடியும் என்றும் கமலநாதன் தெரிவித்துள்ளார்.