பெங்களூர் – கடல் கடந்து வாழும் இந்திய இளைஞர்களை ஒருங்கிணைத்து வரும் பிரவாசி பாரதிய திவாஸ் மூலம், மலேசிய இளைஞர்கள் கல்வி மற்றும் வர்த்தகத் துறையில் சிறப்பான வளர்ச்சியை அடைந்து வருவதாக இன்று சனிக்கிழமை பெங்களூரில் துவங்கிய பிரவாசி இளைஞர் மாநாட்டில் கலந்து கொண்ட மலேசிய இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் டத்தோ எம்.சரவணன் தெரிவித்தார்.
“இன்று பாரதிய திவாசுக்கான இளைஞர் மாநாடு அதிகாரப்பூர்வமாகத் துவங்கியது. உலகம் முழுவதும் உள்ள இந்திய இளைஞர் சக்தி, அதாவது கடல் கடந்து வாழும் இந்திய இளைஞர்களை ஒருங்கிணைத்து, சமுதாய, சமூகவியல், பொருளாதாரம், கல்வி போன்ற அடிப்படை விவகாரங்களில் உள்ள இருவழிப் பயணங்களை எவ்வாறு மேற்கொள்ளலாம் என இம்மாநாட்டில் முன்னேற்பாடுகள் செய்யப்படுகின்றன.”
“இதன் வாயிலாக உலகம் முழுவதும் உள்ள இளைஞர்கள் தங்களின் தொடர்புகளை பெருக்கிக் கொண்டு இந்தத் துறையில் வெற்றியடையக் கூடிய சாத்தியக் கூறுகள் குறித்து ஆராயலாம். அதை மையமாகக் கொண்டு தான் இன்றைய மாநாட்டின் கருப்பொருள் அமைந்திருக்கிறது. மலேசியாவைப் பொறுத்தவரையில், நமக்கும், இந்திய நாட்டிற்கும் கடந்த 1948-ம் ஆண்டு முதல் இருவழி ஒப்பந்தங்கள் இருக்கின்ற காரணத்தால் நம்முடய தேசிய இளைஞர் அமைப்பு, இந்திய இளைஞர் அமைப்போடு, இணைந்து மிகப் பெரிய இணைய வழித் தொடர்புகளைக் கொண்டிருக்கிறது. எனவே வெற்றி பெறக்கூடிய சாத்தியக் கூறுகளை ஆராயும் தளமாக இந்த இளைஞர் மாநாடு இருக்கின்றது.” என்று சரவணன் தெரிவித்தார்.
மேலும், “மலேசிய இளைஞர்களைப் பொறுத்தவரையில், இரு துறைகளில் சிறந்து விளங்குகின்றார்கள். கடந்த 10 ஆண்டு காலமாக நடந்து வரும் இந்த ஒருங்கிணைப்பின் மூலமாக மலேசிய இளைஞர்கள் கல்வியில் அதிகமாகப் பயனடைந்து கொண்டிருக்கிறார்கள். உலகநாடுகளில் குறிப்பாக இந்தியாவில் அவர்கள் உயர்கல்வியைத் தொடர அதிக வாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்பட்டிருக்கிறது. அதற்கு அடுத்ததாக வர்த்தகத் துறையில் மலேசிய இளைஞர்கள் அதிகமாகப் பயனடைந்து வருகின்றார்கள். உலகம் முழுவதும் பொருளாதாரத் தேக்கம் ஏற்பட்டிருக்கும் இந்தக் காலத்தில் மலேசிய இளைஞர்கள் இந்தத் தொடர்புகளைப் பயன்படுத்தி உலக அளவில் வர்த்தகத்தில் பயனடைந்து வருகின்றார்கள்” என்றும் சரவணன் தெரிவித்தார்.
நேரடிச் செய்திகள் – ஃபீனிக்ஸ்தாசன்