Home Featured இந்தியா ‘இளைஞர்களே! ஆற்றலைப் பெருக்கிக் கொள்ளுங்கள்’ – பிரவாசி மாநாட்டில் சாமிவேலு கருத்து!

‘இளைஞர்களே! ஆற்றலைப் பெருக்கிக் கொள்ளுங்கள்’ – பிரவாசி மாநாட்டில் சாமிவேலு கருத்து!

1023
0
SHARE
Ad

samiveluபெங்களூர் – பிரவாசி பாரதிய திவாஸ் 2017-ன் இளைஞர் மாநாடு இன்று ஜனவரி 7-ம் தேதி, சனிக்கிழமை பெங்களூர் அனைத்துலகக் கண்காட்சி அரங்கில் கோலாகமாகத் துவங்கியது.

இம்மாநாட்டில் இந்தியா மற்றும் தெற்காசிய நாடுகளுக்கான மலேசியக் கட்டமைப்புத் துறை சிறப்புத் தூதர் டத்தோஸ்ரீ ச.சாமிவேலு, மலேசிய இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை துணையமைச்சர் டத்தோ எம்.சரவணன் உள்ளிட்ட தலைவர்களோடு மலேசியா சார்பில் நூற்றுக்கணக்கான பேராளர்களும் கலந்து கொண்டனர்.

இம்மாநாடு குறித்து டத்தோஸ்ரீ ச.சாமிவேலு செய்தியாளர்களிடம் பேசுகையில், “உலகெங்கிலும் உள்ள இந்திய இளைஞர்கள் இம்மாநாட்டைப் பார்த்து, அதில் இருக்கக் கூடிய உள்ளடக்கங்களை அறிந்து, தானும் எப்படி ஒரு சிறந்த இளைஞராக உருவாக முடியும் என்று சிந்திக்கக் கூடிய நிலையை அடைந்தால் நிச்சயமாக அவர்களுக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது.”

#TamilSchoolmychoice

“இன்றைய நிலையில், நான் என்ன நினைக்கிறேன் என்றால், இளைஞர்களுக்கு அதிகமான ஆவல் இருக்கிறது. அந்த ஆவல் என்பது நான் பெரிய மனிதனாக ஆக வேண்டும், நன்றாக சம்பாதிக்க வேண்டும் என்று இருக்கிறது. அதை சற்று மாற்றி தன்னுடைய ஆற்றலைப் பெருக்கி அடுத்தவர்களுக்கு உதவுவதற்கு எனக்கு ஒரு வாய்ப்பைக் கொடு இறைவா என்று கேட்கக் கூடிய தெளிவு வேண்டும்” என்று தெரிவித்தார்.

மலேசிய இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலம்

இம்மாநாட்டில் கலந்து கொள்ளும் மலேசிய இளைஞர்கள் குறித்து சாமிவேலு கூறுகையில்,”இம்மாநாட்டை மலேசிய இளைஞர்கள் கவனித்தால், இந்தியாவில் இருக்கக் கூடிய இளைஞர்கள், வெளிநாட்டில் இருக்கக் கூடிய இளைஞர்கள் அவர்களுக்குள் இருக்கும் வித்தியாசங்களை அறிந்து கொள்ள முடியும். தொடர்ந்து வெறும் இளைஞனாக மட்டும் இல்லாமல், பயனுள்ள நிலையை அடைய , குறிப்பாக எதிர்காலத்தை மனதில் கொண்ட ஒரு இளைஞனாக இந்த சூழ்நிலையை வைத்து வளர்த்துக் கொள்ளலாம். இம்மாநாட்டில் மலேசிய இளைஞர்கள் கலந்து கொண்டால் அவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிட்டும், வர்த்தகம், கல்வி குறித்த நிறைய தகவல்களை அறிந்து கொண்டு, சிறந்த நிலையை அடைய முடியும்.” என்று தெரிவித்தார்.

முந்தைய மாநாடுகள்

இதற்கு முன்பு நடந்த மாநாடுகள் குறித்து சாமிவேலு பேசுகையில், “எல்லா மாநாடும் அதில் கலந்து கொள்பவர்களுக்கு புதிய சிந்தனையை ஏற்படுத்துகின்றது. அந்த சிந்தனையோடு அவர்கள் வீடு சென்று, நான் என்ன செய்ய வேண்டும் என்று சிந்தித்தாலே போதும். அதுவே சிறந்த வளர்ச்சியை ஏற்படுத்தும்” என்று தெரிவித்தார்.

நேரடிச் செய்திகள் – ஃபீனிக்ஸ்தாசன்