பெங்களூர் – கர்நாடக மாநிலம் பெங்களூரில் நடைபெற்று வரும் 14-வது புலம்பெயர்ந்தோர் மாநாட்டில் (பிரவாசி பாரதிய திவாஸ் 2017) இன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றினார்.
இதனையடுத்து, உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து வந்திருந்த இந்திய வம்சாவளித் தலைவர்களை தனிப்பட்ட முறையில் சந்தித்த நரேந்திர மோடி, நட்புறவை வலுப்படுத்துவது குறித்தும், புதிய திட்டங்கள் குறித்தும் கலந்தாலோசித்தார்.
இந்நிலையில், மலேசியா சார்பில் கலந்து கொண்ட இந்தியா மற்றும் தெற்காசிய நாடுகளுக்கான மலேசியக் கட்டமைப்புத் துறை சிறப்புத் தூதர் டத்தோஸ்ரீ உத்தாமா சாமிவேலு மற்றும் மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரும், சுகாதாரத்துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியமும் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இச்சந்திப்பில், இந்தியா – மலேசியா இடையிலான நட்புறவு குறித்தும், மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் அதிகாரப்பூர்வ இந்தியப் பயணம் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.