கோலாலம்பூர் – பண்டைத் தமிழர்கள் விருந்தோம்பலில் தலை சிறந்து விளங்கினர். தம்மை நாடிவந்த விருந்தினருக்கு சுவையான உணவு வகைகளைச் செய்து விருந்தளித்து மகிழ்வித்தனர்.
பண்டைத் தமிழர்கள் சுவைமிக்க மற்றும் ஆரோக்கியமான உணவுப் பொருள்களை சமைப்பதில் தேர்ந்திருந்தனர் என்றால் மிகையாகாது.
மறைக்கப்பட்ட, மறக்கப்பட்ட நமது முன்னோர்களின் சங்க கால உணவுகளை மீண்டும் அறிமுகம் செய்யும் வகையில் இவ்வருடமும் அஸ்ட்ரோவில் ஒளிபரப்பாகவிருக்கும் ‘பொங்கு தமிழ்’ நிகழ்ச்சியில் பல்வேறு பானங்கள், கூழ் வகைகள், சாதங்கள் மற்றும் பலகாரங்களும் மக்களுக்கு வழங்கப்படவிருக்கின்றன.
அஸ்ட்ரோ பொங்கு தமிழ் முதல் நிகழ்ச்சி எதிர்வரும் 13 ஜனவரி 2017-ஆம் நாள் மாலை 4.00 மணியளவில் கூலிம் நகரில் நடைபெறுகின்றது.
இரண்டாவது நிகழ்ச்சி 15 ஜனவரி 2017-ஆம் நாள் ரவாங், கோலகாரிங் சாலையிலுள்ள தமிழ்ப் பள்ளியில் மாலை 4.00 மணிக்கு நடைபெறுகின்றது.
மூன்றாவது நிகழ்ச்சி எதிர்வரும் 17 ஜனவரி 2017-ஆம் நாள் பாகான் டத்தோவில், ஹூத்தான் மெலிந்தாங் சன்மார்க்க மண்டபத்தில் மாலை 4.00 மணியளவில் நடைபெறுகின்றது.
இந்த நிகழ்ச்சிகளில் அரிசி பருப்பு பாயாசம், பதநீர் அல்வா, நெல்லிக்காய் சாதம், இளநீர் பாயசம், வெற்றிலை சாதம், பச்சை புளி ரசம் மற்றும் இன்னும் பல விதமான சங்க கால உணவுகள் இலவசமாகப் பறிமாறப்படவிருக்கின்றன.
அதுமட்டுமின்றி, தமிழர்களால் மரபு வழியாக விளையாடப்பட்டு வந்த விளையாட்டுகள் அல்லது பரவலாக விளையாடப்படும் விளையாட்டுகள் தமிழர் விளையாட்டுகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்த விளையாட்டுகள் தென்னிந்தியாவில் இன்றும் பரவலாக விளையாடப்பட்டு வருகின்றன.
அவ்வகையில், நமது பாரம்பரிய விளையாட்டுக்களான பாண்டியாட்டம், பரமபதம் போன்ற விளையாட்டுகளை விளையாடும் வாய்ப்பினை எற்படுத்தி தருகின்றது இவ்வருட ‘பொங்கு தமிழ்’ விழா.
பொங்கு தமிழ் நிகழ்ச்சிகள் நடைபெறும் நாட்களில் மாலை 4.00 மணி தொடக்கம் இரவு 7.30 மணி வரை இவ்விளையாட்டுகளைப் பொங்குத் தமிழ் விழாவில் பொதுமக்கள் விளையாடி மகிழலாம்.