Home அரசியல் வேதமூர்த்தி 11ஆவது நாளாக உண்ணாவிரதம்

வேதமூர்த்தி 11ஆவது நாளாக உண்ணாவிரதம்

598
0
SHARE
Ad

waythaரவாங், மார்ச் 21- மலேசிய இந்தியர்களின் 56 ஆண்டு கால மனித உரிமை மீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் பி.வேதமூர்த்தி மேற்கொண்டிருக்கின்ற உண்ணாவிரதம் 11ஆவது நாளாக நீடித்தது.

இந்தியர்களின் சமூக, பொருளாதார விடியலுக்காக தேசிய முன்னணி மற்றும் மக்கள் கூட்டணி ஆகிய இரண்டு அரசியல் கூட்டணிகளில் ஏதவது ஒரு தரப்பு எழுத்து பூர்வமான அங்கீகாரத்தை அளிக்கும் வரையில் இந்த உண்ணாவிரத்தை அவர் மேற்கொண்டுள்ளார்.

ஜாலான் டெம்ப்ளர் 17, ½ மைலில் உள்ள கம்போங் பெங்காலியில் அருள்மிகு அகோர வீர பத்ர-சங்கிலிக் கருப்பர் ஆலயத்தில் வெறும் தண்ணீரை மட்டுமே அருந்திய நிலையில் வேதமூர்த்தி தமது போராட்டத்தை இன்று வரை தொடர்ந்து வருகிறார்.

#TamilSchoolmychoice

அவ்வகையில், மக்கள் கூட்டணி அரசாங்கம் அமைத்தால் மலேசியர்கள் அனைவரையும் அரவணைத்து ஆட்சி செய்யும் திட்டங்களை கொண்டுள்ளது. ஹிண்ட்ராஃப் முன் வைத்துள்ள இத்திட்ட வரைவின் கோரிக்கைகளின் அம்சங்கள் மக்கள் கூட்டணி திட்ட வரைவில் இருக்கிறது என்று சிலாங்கூர் மாநில  ஆட்சிக் குழு உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயகுமார் விளக்கமளித்தார். நேற்று முன் தினம் பி. வேதமூர்த்தியை காண வந்த போது சேவியர் இதனைத் தெரிவித்தார். அந்த வகையில், சிலாங்கூர் மாநிலத்தில் இந்த நான்கு வருடங்களில் இந்தியர்களுக்கு மக்கள் கூட்டணி  உறுதியளித்து, அதனை செய்தும் முடித்துள்ளதை மலேசிய மக்கள் அனைவரும் அறிந்த உண்மை என்று சேவியர் எடுத்துக்கூறினார்.

முதலாவதாக வெளியிட்ட மக்கள் கூட்டணி திட்ட வரைவில் இந்தியர்களுக்கென திட்டங்கள் வகுக்கப்படவில்லை என்ற கருத்துக்கள் கிடைக்கப்பெற்றது. மக்கள் கூட்டணி தனது திட்ட வரைவை சீர் செய்து வெளியிடவுள்ளது என்று போர்ட்டிக்சன் சட்டமன்ற உறுப்பினர் எம்.ரவி தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து, மக்கள் கூட்டணியைச் சேர்ந்த தலைவர்கள் சிலர் இவ்வாலயத்திற்கு வருகை தந்து வேதமூர்த்தி மேற்கொண்டிருக்கின்ற உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு நல்கி வருகின்றனர்.

இவ்வாலயத்தில் தினந்தோறும் இரவு மணி 7.30 மணிக்கு பிரார்த்தனைகளும் விளக்கக்கூட்டங்களும் நடைபெற்று வருகின்றன. பொதுமக்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு வேதமூர்த்திக்கு ஊக்கமளிப்பதோடு தெளிவான விளக்கங்களும் பெற்று செல்லலாம்.

மேல் விவரங்களுக்கு, ஹிண்ட்ராஃப் துணைத்தலைவர் ஐம்புலிங்கம் 016-354-5869 மற்றும் 017-623-0052 என்ற எண்களின் வழி தொடர்பு கொள்ளலாம்.