கோலாலம்பூர் – சிங்கப்பூரில் போதைப் பொருள் கடத்தல் குற்றத்திற்காக மரண தண்டனையை எதிர்நோக்கியிருக்கும் பிரபாகரன் ஸ்ரீவிஜயன் என்ற 29 வயது மலேசியர், தனது தரப்பில் உள்ள நியாயங்களை தெரிவிக்க நியாயமான விசாரணை நடத்தாமல் தட்டிக்கழிப்பதாக சிங்கப்பூர் அரசாங்கத்திற்கு எதிராக பிரபாகரனின் தாயார் வி.ஈஸ்வரி இன்று திங்கட்கிழமை மலேசிய நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த விவகாரத்தில், சிங்கப்பூருக்கு எதிராக அனைத்துலக நீதிமன்றத்தில் புத்ராஜெயா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனது மனுவில் குறிப்பிட்டுள்ள ஈஸ்வரி, இவ்வழக்கில் மலேசிய வெளியுறவுத்துறை அமைச்சையும், அரசாங்கத்தையும் பொறுப்பாளர்களாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, ஈஸ்வரியின் வழக்கறிஞரான என்.சுரேந்திரன் கூறுகையில், தனது மகன் தரப்பிலுள்ள நியாயங்களை நிரூபிக்க எல்லா வழிகளிலும் முயற்சித்து தோல்வியுற்ற பிறகே ஈஸ்வரி இம்முடிவிற்கு வந்துள்ளதாக சுரேந்திரன் தெரிவித்தார்.
கடந்த 2012-ம் ஆண்டு சிங்கப்பூர் குடிநுழைவு மையத்தில், பிரபாகரன் ஓட்டி வந்த காரில் இருந்து 22.24 கிராம் டியோமார்ஃபின் என்ற போதைப் பொருளை சிங்கப்பூர் அதிகாரிகள் கைப்பற்றினர்.
எனினும், அந்தக் கார் தன்னுடையது இல்லை என்றும், நாதன் என்பவரிடம் இருந்து தான் அக்காரை பெற்றதாகவும், அதில் போதைப் பொருள் இருப்பது தனக்குத் தெரியாது என்றும் பிரபாகரன் முறையிட்டு வருகின்றார்.
கடந்த 2014-ம் ஆண்டு, ஜூலை 22-ம் தேதி, மருந்துகளைத் தவறாகப் பயன்படுத்தும் சட்டம், பிரிவு 7-ன் கீழ், சிங்கப்பூர் உயர்நீதிமன்றத்தில் பிரபாகரனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த 2015-ம் ஆண்டு பிரபாகரன் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டபோது சிங்கப்பூர் மேல்முறையீட்டு நீதிமன்றம் அதனை நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.