சென்னை – ஜல்லிக்கட்டு விவகாரம் உச்சநிலையை எட்டியுள்ள நிலையில், பீட்டா அமைப்பில் இருந்த நடிகை திரிஷாவை, இணையவாசிகள் பலர் கடுமையாக வசை பாடி வந்தனர்.
இந்நிலையில், “நான் ஒரு தமிழச்சி. நான் பீட்டா அமைப்பை ஆதரிக்கிறேன். மிருகங்களை கொடுமைப்படுத்துவதையும், பழங்கால முறை என்பதைப் பற்றியெல்லாம் கவலையில்லை. ஜல்லிக்கட்டை தடை செய்ய வேண்டும்” என்று த்ரிஷாவின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் அண்மையில் ஒரு பதிவு வெளியானது.
இதனால் ஆத்திரமடைந்த இணையவாசிகள், திரிஷா நடித்து வந்த படப்பிடிப்புகளுக்குச் சென்று இடையூறு செய்தனர்.
அதன் பின்னர், அப்பதிவை தான் வெளியிடவில்லை என்றும், தான் ஜல்லிக்கட்டை எதிர்க்கவில்லை என திரிஷா சமாதானம் செய்த போதும் கூட, இணையவாசிகள் அவரை விடாமல் விமர்சித்து வந்தனர்.
இதனிடையே, நடிகர் கமல்ஹாசன் தலையிட்டு, கன்னியும் வாழட்டும், காளையும் வாழட்டும் என்று இணையவாசிகளை சாந்தப் படுத்த முயன்றார் என்றாலும் ரசிகர்கள் தொடர்ந்து தன்னைக் காயப்படுத்தி வந்ததால், திரிஷா டுவிட்டரில் இருந்து விலகியுள்ளார்.