ஜோத்பூர் – அனுமதி இன்றி ஆயுதம் வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் நடிகர் சல்மான் கான் இன்று புதன்கிழமை விடுதலை செய்யப்பட்டார்.
18 ஆண்டுகளுக்கு முன்பு, படப்பிடிப்பு ஒன்றில் கலந்து கொள்ள ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் சென்ற சல்மான் கான், ஓய்வு நேரத்தில் மான் வேட்டை ஆடியது தொடர்பாக நான்கு வழக்குகளை எதிர்கொண்டு வந்தார்.
இந்த வழக்குகளில், உரிய அனுமதியின்றி சல்மான் கான் துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டும் அடங்கும். இந்த வழக்கு ஜோத்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
அதில், அனுமதியின்றி துப்பாக்கி வைத்திருந்து அதைப் பயன்படுத்தியதாக கூறப்பட்ட குற்றச்சாட்டை மறுத்த சல்மான் கான் தரப்பு வழக்கறிஞர், ஏர்கன் இரக துப்பாக்கியை மட்டுமே சல்மான் கான் வைத்திருந்தார் என்றும், நிஜத் துப்பாக்கி வைத்திருந்ததாகக் கூறப்படுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் வாதாடினார்.
இந்நிலையில், வாதங்கள் முடிந்த நிலையில், இன்று புதன்கிழமை ஜோத்பூர் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பில், இவ்வழக்கில் சல்மான் கான் சட்டத்தை மீறவில்லை என நிரூபிக்கப்பட்டது.
இதனையடுத்து, சல்மான்கானை இவ்வழக்கில் இருந்து விடுவிப்பதாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.