Home Featured இந்தியா ஜல்லிக்கட்டு அவசரச் சட்டம்- சட்ட அமைச்சர் கையெழுத்திட்டார்!

ஜல்லிக்கட்டு அவசரச் சட்டம்- சட்ட அமைச்சர் கையெழுத்திட்டார்!

639
0
SHARE
Ad

ravi-shankar-prasad

புதுடில்லி – தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கடந்த வியாழக்கிழமை புதுடில்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்த பின்னர், சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அவசரச் சட்டத்தில், சில திருத்தங்களுடன் சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் (படம்) நேற்று கையெழுத்திட்டார்.

சில திருத்தங்களுடன் நேற்றிரவு இந்த சட்டத்தில் அவர் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து, இந்த சட்டம் இன்று இந்திய அதிபரின் கையெழுத்துக்காக அனுப்பப்படுகின்றது.

#TamilSchoolmychoice

அதே வேளையில், இன்று சனிக்கிழமை வெளிநாட்டிலிருந்து திரும்பியுள்ள அதிபர் பிரணாப் முகர்ஜியை அதிமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவைத் துணைத் தலைவர் தம்பிதுரை தலைமையில் சந்திக்கின்றனர்.

நேற்று மட்டும் இந்த புதிய அவசரச் சட்டம் நான்கு அமைச்சுகளின் ஒப்புதலை சில மணி நேரங்களில் கடந்து சென்றது.

சுற்றுச் சூழல் அமைச்சு, விவசாய அமைச்சின் விலங்குகள் இனப் பெருக்க இலாகா, சட்ட அமைச்சு, மற்றும் உள்துறை அமைச்சு என நான்கு அமைச்சுகளின் ஒப்புதலையும் பெற்ற பின்னரே இந்த அவசரச் சட்டம் அமுலுக்கு வருகின்றது.

இன்று அதிபரின் ஒப்புதல் பெறப்பட்டதும் ஜல்லிக்கட்டு மீதான சட்டம், தமிழக ஆளுநரில் ஒப்புதலுக்காக அனுப்பப்படும். தமிழக ஆளுநர் இன்று சென்னை நோக்கி வந்து கொண்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆளுநரின் ஒப்புதல் கையெழுத்திட்டு பெறப்பட்டதும் இன்றே அவசரச் சட்டம் பிறப்பிக்கப்படும்.தமிழகம் எங்கும் நிகழ்ந்து வரும் போராட்டங்களும் இன்றுடன் ஒரு முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனைத் தொடர்ந்து நாளை வாடிவாசல் ஜல்லிக்கட்டு உறுதியாக நடைபெறும் எனத் தெரிகிறது. வாக்குறுதி தந்ததுபோல் ஓ.பன்னீர் செல்வம் மதுரை சென்று நாளை வாடி வாசல் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை தொடக்கி வைப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

ஜல்லிக்கட்டு தொடர்பான தீர்ப்புகளை ஒரு வாரத்திற்கு ஒத்தி வைக்கும்படி உச்ச நீதிமன்றத்தை மத்திய அரசின் சார்பில் அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் கேட்டுக் கொண்டதற்கிணங்க, உச்ச நீதிமன்றமும் அடுத்த ஒரு வார காலத்திற்கு இது தொடர்பான எந்தவித உத்தரவையும் விடுக்கப் போவதில்லை. இதனால், விலங்குகள் நல அமைப்புகள் ஜல்லிக்கட்டு மீதான தடையைப் பெறுவதற்கும் வாய்ப்பில்லை.