கோலாலம்பூர் – கடந்த டிசம்பர் 2-ம் தேதி தனது கானகன் நாவலுக்காக சாகித்ய அகாடமி யுவ்ரஸ்கார் விருதை பெற்ற இளம் எழுத்தாளர் லஷ்மி சரவணக்குமார் (31 வயது) ஜல்லிக்கட்டுக்கு ஆதரவளிக்கும் வகையிலும் , ஜல்லிக்கட்டு மீதான தடையை அரசு மீட்டுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திலும் தனது எதிர்பை தெரிவிக்கும் நோக்கில் யுவ்ரஸ்கார் விருதை திருப்பி கொடுத்துள்ளார்.
இது குறித்து லஷ்மி சரவணக்குமார் தெரிவித்துள்ளதாவது:-
“இந்த மொழி என் அடையாளம். இதை நேசிக்கிற ஒவ்வொருவரும் என் உறவுகளே. நீண்ட பல வருடங்களாய் தமிழ் சமூகம் தொடர்ந்து மத்திய அரசால் வஞ்சிக்கப்படுவது தொடர்ந்தபடி தான் இருக்கிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் வெவ்வேறு பிரச்சனைகளுக்காக சிறு சிறு குழுக்களாக எம் மக்கள் போராடினாலும் அந்தப் போராட்டங்கள் வெவ்வேறு அரசியல் காரணங்களால் மழுங்கடிக்கப்பட்டு விடுகின்றன.”
“இன்று மொத்த தமிழ் சமூகமும் திரண்டு தம் உரிமைக்காக குரல் கொடுப்பது தற்செயலானதாய் நடந்தது அல்ல. இது வெறுமனே ஜல்லிக்கட்டு பிரச்சனைக்கான போராட்டமும் அல்ல. இந்த எழுச்சி தீபத்தில் தங்களை நெருப்பாக்கி எம் சமூகத்தை ஒளிர்விக்கத் துடிக்கும் இளைய சமுதாயத்தின் அயராத போராட்டங்கள் மகத்தானவை. நாங்கள் தொடர்ந்து ஒடுக்கப்படுகிறோம் என்பதன் அழுத்தத்தில் இன்று இவர்களோடு ஒரு எளிய மனிதனாகவே இந்த போராட்டத்தில் கைகோர்க்கிறேன்.”
“இந்திய பெருந்தேசம் முழுக்க பல்லாயிரம் கோடிகள் கடன் வாங்கிய பெருமுதலாளிகள் யாரும் இதுவரை தண்டிக்கப்பட்டதாகவோ தற்கொலை செய்துகொண்டதாகவோ நமக்கு எந்த செய்திகளுமில்லை. ஆனால் ஒவ்வொரு நாளும் இங்கே இந்த தேசத்திற்கு உணவளிக்கும் விவசாயிகள் ஏதோவொரு கிராமத்தின் வறண்ட மணல் மேட்டில் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். எம் மாநிலத்தில் பசியால் வறுமையால் தற்கொலை செய்யப்பட்ட விவசாயிகளின் குரல் நான். அவர்களின் உழைப்பில் பசியாறியவன். அந்த வறுமையும் துக்கமும் என்னையும் சேர்ந்ததே. எம் விவசாய உறவுகளைக் காக்க எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்கத் தயாராய் இல்லாத மத்திய அரசு எப்போதும் போல் பெரு வணிக நிறுவனங்களின் வரவிலும் வளர்ச்சியிலும் மட்டுமே கவனம் கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கது.”
“ஒரு எழுத்தாளனுக்கு தம் சமூகத்தின் கலாச்சார மற்றும் சமூக செயல்பாடுகளில் எப்போதும் கூடுதல் கவனமிருக்க வேண்டுமென நம்புகிறவன் நான். இன்று எங்கள் உரிமைகளுக்காக களம் கண்டிருக்கும் எம் சகோதரர்களோடு உத்வேகத்துடன் போராட்டத்தின் இன்னொரு வடிவமாய் இணைந்து கொள்ளவே மத்திய அரசின் சாகித்ய அகதெமியால் எனக்கு வழங்கப்பட்ட யுவபுரஸ்கார் விருதை நான் திருப்பி அளிக்கிறேன். இந்த விருது என் பத்து வருட உழைப்பிற்கு பிறகு கிடைத்தது என்பதால் இதன் மதிப்பை மற்ற எல்லோரையும் விட நான் நன்றாகவே அறிவேன்.”
“எனினும் இந்த சமயத்தில் இந்த விருதை விடவும் எம்மைச் சூழ்ந்திருக்கும் பிரச்சனைகளுக்குத் தீர்வே முக்கியம். இதை ஒரு அழைப்பாக தேசம் முழுக்க மக்களுக்காக குரல் குடுக்கும் எம் எழுத்தாள உறவுகளுக்கு அனுப்புகிறேன். இந்த முறையாவது எங்களோடு இணைந்து குரல் கொடுங்கள். எந்த மாநிலத்தில் தனியொரு மனிதன் துன்புறுத்தப்பட்டாலும் அதுகுறித்து அக்கறை கொள்கிறவர்களாகவும் அவர்களின் உரிமைக்கு குரல் கொடுக்கிறவர்களாகவும் நாங்கள் எப்போதும் இருந்து வருகிறோம். இந்தமுறை எங்களுக்காக தேசிய அளவிலான எழுத்தாளர்களும் ஊடகங்களும் கொஞ்சம் இறங்கி வாருங்கள்.”
“தயவு செய்து இதை வெறுமனே ஜல்லிக்கட்டிற்கு எதிரான ஒரு போராட்டமாக மட்டும் கருதிவிட வேண்டாம். நாங்கள் கொஞ்சம் கொஞ்சமாக கார்ப்ரேட் மயமாகி வரும் ஒரு தேசத்தை காக்க விழித்தெழ வேண்டுமென்றுதான் உங்கள் எல்லோரையும் அழைக்கிறோம். இந்தியா மாதிரியான ஒரு பன்மை கலாச்சாரம் நிறைந்த சமூகத்தில் தனித்துவமிக்க இனக்குழுக்களின் அடையாளங்கள் முக்கியமானவை.”
“ஆக, ஜல்லிக்கட்டை நடத்த உடனே அனுமதியளிக்க அவசர சட்டம் இயற்றவும், ஏடபிள்யூபிஐ (AwBI) மற்றும் பீட்டாவை தடை செய்யவும் வலியுறுத்துவதோடு வஞ்சிக்கப்பட்ட எம் விவசாயிகளுக்கான நலனை உடனே மத்திய அரசு கவனத்தில் எடுக்க வேண்டுமென்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.இந்த மாபெரும் போராட்டம் அடுத்த தலைமுறையிடமிருந்து நல்ல தலைவர்களை உருவாக்கும் என்கிற சின்னதொரு நம்பிக்கை இருக்கிறது. இந்த விருதை திருப்பி அளிப்பதில் உண்மையில் வாங்கிய போது இருந்ததை விடவும் அதிகமான பெருமிதத்தையே உணர்கிறேன்” இவ்வாறு எழுத்தாளர் லஷ்மி சரவணக்குமார் தெரிவித்துள்ளார்.